புதுக்கோட்டை மாப்பிள்ளைகளுக்கு.. அவ்வளவு வெறி..! 1424 புகார்கள் பதிவு

0 11394

தமிழகத்தில் ஊரடங்கு கால கட்டத்தில், அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவன்மார்களால், இல்லத்தரசிகள் அதிகம் இம்சைக்குள்ளாகி இருப்பது புகார்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 57  நாட்களில் புதுக்கோட்டையில் மட்டும் ஆயிரத்து 424 பெண்கள் குடும்ப வன்முறை குறித்து புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் கணவனும் மனைவியும் 5 நிமிடம் வீட்டில் நேருக்கு நேராக அமர்ந்து குடும்ப உறுப்பினர்களின் நிறைகுறைகளை பற்றி பேசத்தொடங்கினால் இறுதியில் சண்டையில் தான் முடிகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் 24 ந்தேதி முதல் மே 21 ந்தேதி வரை ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டுக்குள் முடங்கி இருந்த கணவன்மார்கள் அடித்து துன்புறுத்தியதாக தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளிடம் இருந்து 5 ஆயிரத்து 740 புகார்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.

இதில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாப்பிள்ளைகளுக்கு தான் கோபம் அதிகமாக இருந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 1424 பெண்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 819 புகார்களும் நெல்லையில் 708 புகார்களும் இல்லத்தரசிகளிடம் இருந்து வந்துள்ளன.

புகார் வந்த பெரும்பாலான வீடுகளில் கணவனும் மனைவியும் விட்டுக் கொடுக்கும் பக்குவம் இன்றி முட்டி மோதிக் கொண்டதால் காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது. உடனடியாக விரைந்து சென்ற போலீசார் பக்குவமாக எடுத்துச் சொல்லி கணவன் மனைவியை அமைதிப்படுத்தியுள்ளனர்.

சில வீடுகளில் மனைவிக்கு காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கும் கணவன்மார்கள் மீது முறையாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் இல்லத்தரசிகளுக்கு கடுமையான தொல்லை கொடுத்த 48 இம்சை அரசர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுக்கடைகள் திறந்த பின்னர் குடும்பத்து இம்சை அரசர்கள் அதிகளவில் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

முதல் இரண்டு கட்ட ஊரடங்கை ஒப்பிட்டு இந்த முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பெரும்பாலான ஆண்கள் வீடுகளை விட்டு பகல் நேரத்தில் வெளியில் சென்று விடுவதாலும் பெண்களிடம் இருந்து வரும் புகார்களும் குறைந்துள்ளன. காவல்துறையினர் உடனடி நடவடிக்கை காரணமாகவே குடும்ப வன்முறை குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கிறார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி.

அதே நேரத்தில் போலீசுக்கு செல்லும் அளவுக்கு பிரச்சனை இல்லாமல் குடும்பத்தை நேசிக்கும் இல்லத்தரசர்கள் உள்ள மாவட்டமாக கிருஷ்ணகிரி, திருச்சி, கடலூர், திருவண்ணாமலை , திருச்சி நகரப்பகுதி இருப்பதை காணமுடிகின்றது. இப்பகுதிகளில் இருந்து ஒரு புகார் கூட காவல்துறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

நாட்டில் டிக்டாக்கில் குடும்பம் நடத்தும் நபர்கள் செய்கிற சேட்டைகள் எல்லாம் ஊரடங்கு காலத்தில் பல வீடுகளில் அரங்கேறி இருப்பதற்கு காவல்துறையினரிடம் குவிந்துள்ள புகார்களே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments