போலியாக லைசால், விம் ஜெல், டெட்டால் தயாரித்த குஜராத்தீஸ்..! கிருமிக்கே அல்வா..!

0 7441

சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், சுற்றுவட்டார  பகுதிகளில் கொரோனாவை பயன்படுத்தி போலியாக தயாரித்து விற்கப்பட்ட லைசால், டெட்டால், விம் ஜெல் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஒரிஜினல் போல, போலிகளை தயாரித்து மக்களை ஏமாற்றிய குஜராத்திகளின் கைப்பக்குவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னையில் கொரோனா ஆரம்பித்த நாள் முதல் டெட்டால், லைசால், போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. கடைகளுக்கு தேவையான அளவு பொருட்களை விற்பனைக்கு கொடுக்க இயலாமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தவித்து வந்தன. அந்த அளவுக்கு பெரும்பாலான பகுதிகளில் இது போன்ற கிருமி நாசினியான தூய்மை பயன்பாட்டு பொருட்களின் தேவை அதிகரித்தது.

இந்த சூழ்நிலையிலும் சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஜாம்பஜார், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவோ, தேவை அதிகரித்ததாகவோ சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அந்த பொருட்களை சப்ளை செய்யும் முக்கிய டீலர் கடைகளில் சென்று விசாரித்தால் ஸ்டாக் உள்ளதாகவே தகவல் வந்தது.

இதையடுத்து 40 நட்கள் கழித்து உஷாரான நிறுவன மேலாளர்கள் நேரடியாக சில கடைகளுக்கு சென்று லைசாலை வாங்கி சோதித்த போது அது தங்கள் நிறுவன தயாரிப்பு போலவே சப்ளை செய்யப்படும் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து ஒரு கடைக்கு சப்ளை செய்தவரின் தொடர்பு எண் கிடைத்தது. இதையடுத்து தொடர்பு எண்ணுடன் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில் செங்குன்றம் அடுத்த வட பெரும்பாக்கத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த போலி லைசால் ஆலையை கண்டுபிடித்தனர். உள்ளே சென்று ஆய்வு நடத்திய போது அங்கு லைசால் மட்டுமல்லாமல் கூடுதலாக டெட்டால், விம்ஜெல் போன்றவை தயாரித்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த போலிகளை தயாரிக்க அங்குள்ளவர்கள் அதிகமாக மெனகெடவில்லை, ஒரு பேரலில் சோப்பு கரைசல் அடுத்த பேரலில் வாசனையுடன் கூடிய வண்ண கலவை தேவையான அளவு தண்ணீர் எடுத்து கலந்து எளிமையான முறையில் லைசாலை தயார் செய்துள்ளனர்..!

சோப்பு தயாரிக்கும் நிறுவனம் என முறையான அனுமதியுடன் நடத்தப்பட்டு வந்த போலியான கிருமி நாசினி தயாரிப்பு ஆலையை குஜராத் மண்ணின் மைந்தரான ரமேஷ் பட்டேல் என்பவர் நடத்திவந்துள்ளார். அவரது யோசனைப்படி லைசால், டெட்டால், விம்ஜெல் போன்றவற்றை ஒரிஜினல் போலவே கன கச்சிதமாக தயாரித்து பேக்கிங் செய்து வந்த துளசி நாது சிங், ராஜேஷ் ரானா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ரமேஷ் பட்டேல் தலைமறைவாகிவிட்டார்.

அந்த போலி கிருமி நாசினி தயாரிப்பு ஆலையில் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி தயாரிப்புகளையும், போலி லேபில்களையும், பேக்கேஜிங் பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த ஆலையும் சீல் வைக்கப்பட்டது.

இது போன்ற போலி பொருட்கள் தயாரித்து சிக்கிக் கொண்டால் சம்பந்தபட்டவர்கள் பெற்ற தொழில் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் மீண்டும் எந்த ஒரு தொழிலுக்கும் அனுமதி கிடைக்காதபடி கருப்பு பட்டியலில் வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொரோனாவை ஒழிக்க கிருமி நாசினி கேட்டால், அதையே போலியாக தயாரித்து மக்களை ஏமாற்றி வந்துள்ளனர் இந்த குஜராத்தீஸ்..! தாங்கள் வாங்குவது போலியானவை என்பது கூட தெரியாமல் வியாபாரிகளும் வாங்கி விற்றுவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதே போன்று புறநகர் பகுதிகளில் அமிர்தாஞ்சன், விக்ஸ் உள்ளிட்ட தலைவலி மருந்துகள் போலியாக தயாரிக்கும் ஆலைகள் செயல்படுவதாக கூறப்படுகின்றது. போலீசார் வாரம் ஒரு முறையாவது அங்குள்ள ஒவ்வொரு நிறுவனங்களிலும் என்ன பொருள் தயாரிக்க படுகின்றது என்பதை ஆய்வு செய்தால் மட்டுமே போலியான பொருட்களை ஒழிக்க இயலும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மக்களின் உயிருக்கும் உழைத்த பணத்திற்கும் வேட்டு வைக்கும் போலிகளை ஒழிக்க கடுமையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments