புகார் அளித்த பெண்களின் வீடியோக்களை வெளியிட்ட.. காசியின் கூட்டாளிகள்..! போலீஸ் கடும் அதிர்ச்சி

0 46487

நாகர்கோவிலில் 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகி நெருக்கமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த காமுகன் காசியின் கூட்டாளிகள், புகார் கொடுத்த பெண்களை மிரட்டும் வகையில் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால், காசியிடம் ஏமாந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறையில் இருந்தபடியே போலீசுக்கு தலைவலியாக மாறி இருக்கும் காசியின் பிளாக் மெயில் அட்டூழியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பொள்ளாச்சி சம்பவத்திலேயே கல்லூரி மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய காமுக கும்பலுக்கு முறையான தண்டனை கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் வெகுஜன மக்களிடம் இன்றைக்கும் இருக்கின்றது.

இந்த நிலையில் நாகர்கோவிலில் 80க்கும் மேற்பட்ட பெண்களை முகநூல், இஸ்டாகிராம் வழியாக காதல்வலை விரித்து ஏமாற்றி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த காமுகன் காசி வழக்கில் அவனை குண்டர் சட்டத்தில் அடைத்ததும் பாதிக்கப்பட்ட 5க்கும் மேற்பட்ட பெண்கள் துணிச்சலுடன் வந்து புகார் அளித்தனர்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக 2ஆவது முறையாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்துறையினர் காசியை காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் போலீசுக்கு ஒத்துழைக்க மறுத்த காசி, தான் எந்த ஒரு பெண்ணையும் திட்டமிட்டு ஏமாற்றவில்லை என்றும், எல்லோரு தன்னிடம் விரும்பி வந்து பணத்தை கொடுத்து சென்றது போல கூறியுள்ளான். அவன் உண்மையை மறைக்க முயல்வதாக கருதிய காவல்துறையினர் காசியை முறையாக கவனிக்க தவறியதால், வெளியில் உள்ள வழக்கறிஞர் நண்பர்கள் மூலம் போலீசுக்கு தண்ணீர் காட்டும் வேலைகளை காசி செய்ய தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன்படி போலீஸ் பிடியில் சிக்காமல் வெளி நாட்டில் பதுங்கி உள்ள தனது நண்பன் கவுதம் மூலம் தன் மீது புகார் அளித்த பெண்களுடன் இருக்கும் பெண்களின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு புதிதாக புகார் கொடுக்க எந்த ஒரு பெண்ணும் முன்வரக்கூடாது என்று மிரட்ட தொடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் காசி மீது புகார் அளித்த பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

காசியின் ஒரு லேப்டாப்பை, போலீசாரால் கண்டுபிடிக்க இயலவில்லை, வழக்கறிஞர் ஒருவர் மூலம் அவரது பெண் தோழியிடம் சென்று விட்டதாக கூறப்பட்டது. அந்த பெண் தோழியோ காசியின் கூட்டாளிகள் வாங்கிச்சென்றுவிட்டதாக கூறி போலீசாரை சுற்றலில் விட்டார்.

காசி தனக்கு எதிரான சாட்சியங்களை மிரட்டும் நோக்கில் வெளிநாட்டில் பதுங்கி உள்ள கூட்டாளி கவுதம் என்பவன் மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகின்றது. அதனை கட்டுப்படுத்த இயலாமல் மகளிர் காவல்துறையினர் கோட்டை விட்டு விட்டதாக புகார் கொடுத்த பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கவுதம் குறித்த விவரங்களை விமான நிலையங்களுக்கு தெரிவித்துள்ள போலீசார் , விமானங்கள் இயங்க ஆரம்பித்ததும் அவன் இந்தியாவுக்குள் நுழைந்தால் உடனடியாக கைது செய்யப்படுவான் என்று எச்சரித்துள்ளனர்

அதே நேரத்தில் பொள்ளாச்சி சம்பவம் போன்ற அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், பல பெண்களின் அந்தரங்க படத்தை வெளியிட்டு கூட்டாளிகள் மூலம் போலீசுக்கு மறைந்திருந்து சவால் விடும் காமுகன் காசியின் கூட்டாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments