அலட்சியத்தால் ராயபுரத்தில் அதிகரிக்கும் கொரோனா..! ஜன நெருக்கடியும் காரணம்

0 2015

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் ராயபுரம் மண்டலத்தில் நெருக்கடியான பகுதியில் உள்ள மக்கள் கொரோனாவை ஒரு நோயாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. மக்களின் அலட்சியம் குறித்து பிரத்யேக காட்சிகளுடன் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் தினமும் 500 பேருக்கு குறையாமல் கொரோனா தொற்றுக்குள்ளாவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு வருகின்றது. அதிலும் ராயபுரம் மண்டலத்தில், இதுவரை 1500க்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கியுள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் எப்படி இருக்கிறார்கள்? எதனால் இங்கு மட்டும் இவ்வளவு வேகமாக கொரோனா பரவுகின்றது? என்பதை அறிய அரசு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் கொரோனாவை ஒரு நோயாகவே கருதவில்லை என்பதை காணமுடிந்தது.

33 பேர் கொரொனா பாதிப்புக்குள்ளான ஆஞ்சநேயர் கோவில் பகுதி பார்ப்பதற்கு மினி தாராவி போல காட்சி அளித்தது. மிக குறுகிய இடத்தில் 500க்கும் மேற்பட்ட சிறிய வீடுகள் நெருக்கமாக காணப்பட்டது. இங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீட்டில் தனித்திருக்க இயலாது, காரணம் இருவர் மட்டுமே வசிக்க தகுதியான வீட்டில் 6 பேர் வரை வசித்து வருகின்றனர்.

ஒருவர் கூட முகக்கவசம் அணிவதில்லை. அதனை அறிவுறுத்தவும் யாரும் இல்லை. கழிப்பிடவசதி அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது. அதனால் இங்கு கொரோனா பரவலை தடுக்க இயலாமல் உள்ளது.

ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள சத்தியவாணிமுத்து நகரில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனாவை ஒரு நோயாக கூட மதிக்கவில்லை. கும்பலாக அமர்ந்து தாயம் விளையாண்டு கொண்டு பொழுதை கழித்து வருகின்றனர்

ஆட்டுத்தொட்டி பகுதியில் சாதாரண நாட்களில் இருப்பது போலவே ஒரு வீட்டில் இருந்து அடுத்த வீட்டிற்கு சர்வசாதாரணமாக முககவசம் அணியாமல் சென்று வருகின்றனர். முககவசம் குறித்து கேட்டால் நாங்கள் என்ன முகமூடி கொள்ளையர்களா ? என்று எதிர்கேள்வி எழுப்புகின்றனர்.

காக்காதோப்பு பகுதியில் குருகலான தெருக்களில் சிறிய அளவிலான வீடுகளில் ஏராளமானமக்கள் நெரிக்கியடித்து இயல்பு வாழக்கையை நகர்த்தி கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள நடு சாலையில் அண்டா வைத்து ஊருக்கே பிரியாணி சமைத்துக் கொண்டிருந்தனர்.

டீக்கடையில் ஈக்களை போல மொய்க்கும் கூட்டத்தை சகஜமாக காணமுடிந்தது.. மளிகை கடைகளிலும் சமூக இடைவெளி குறித்த கவலையின்றி அலட்சியமாக மக்கள் இயங்கிக் கொண்டிருப்பதை காணமுடிந்தது.

சாதாரணமாக இருமினால் கூட பிடித்து சென்றுவிடுவதாக கூறும் சிலர், தங்களுக்காக தங்கள் அபிமான நடிகர்கள் கோடிக்கணக்கில் கொடுத்த நிவாரண தொகை எங்கே? என்று உரிமைக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இராயபுரம் மண்டலத்தில் உள்ள குடிசை பகுதிமக்களுக்கு தங்களது அன்றாட சாப்பாட்டிற்கு வழி பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் தங்கள் இயல்பு வாழ்க்கையையும் வருமானத்தையும் 50 நாட்களாக முடக்கிப்போட்ட கொரோனா நோயெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

அலட்சியமாக வலம் மக்களால் வரும் நாட்களில் ராயபுரம் மண்டலத்தில் இருந்து இன்னும் அதிக கொரோனா நோய் தொற்றை கண்டறியலாம் என்பதற்கு அங்குள்ள காட்சிகளே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments