சென்னையில் ஏ.டி.எம் வாயிலாக கொரோனா பரவுகின்றது..! மக்களே உஷார்

0 18424

சென்னை மணலியில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுத்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக சொல்லப்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கால் 50 நாட்களாக வீட்டுக்குள் இருந்தவர் அவசர தேவைக்கு பணம் எடுக்க சென்று பணத்தோடு கொரோனாவையும் வாங்கி வந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை மணலி புது நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக அவரது நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் அவர் ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது நிறுவனத்தில் இருந்து புதன்கிழமை நிறுவனம் செயல்பட இருப்பதால் கொரோனா பரிசோதனை எடுத்து கொரோனா இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அலுவலகம் வர அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி கொரோனா பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டதை அறிந்து உடனடியாக சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அவரது வீடு இருக்கும் சாலையை அடைத்து அவரை தனிமைப்படுத்தினர். அவரது வீட்டில் இருப்போரையும் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்திச் சென்றனர்.

50 நாட்களாக வீட்டுக்குள் இருந்தவருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அப்போது கொரோனா பரிசோதனைக்கு செல்வதற்கு இரு தினங்களுக்கு முன்பு அவர் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார்.. மணலி புது நகரில் உள்ள எந்த ஏ.டி.எம்களிலும் பணம் இல்லாததால், மணலியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுத்து வந்ததாகவும் அங்கிருந்து தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதாரதுறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

சென்னையில் முக்கியமான பகுதிகளில் உள்ள சில தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்கள் தவிர்த்து புற நகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் பராமரிப்பில்லாமல் பேய் வீடு போல கிடக்கின்றது. அனைத்து இடங்களிலும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள எந்த ஒரு ஏ.டி.எம்மிலும் சானிடைசர் வசதி செய்யப்படவில்லை என்று வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வங்கியுடன் இணைந்திருக்கும் ஒரு சில ஏ.டி.எம்கள் மட்டும் பராமரிக்கப்பட்டு உள்ளது. அங்கும் சானிடைசர் வைக்கப்படவில்லை, வங்கி அதிகாரிகளை கேட்டால் சானிடைசர் வைத்தால் அதனை சில வாடிக்கையாளர்கள் எடுத்துச்சென்று விடுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து ஏ.டி.எம் மையங்களையும் கிருமி நாசினி தெளித்து முழுமையாக சுத்தம் செய்வதோடு, பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஏதுவாக சானிடைசர் வைக்கவும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு மாநாகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

இல்லையேல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச்செல்லும் வாடிக்கையாளர்கள் வட்டி இல்லா கடனாக கொரோனாவையும் வாங்கிச்செல்லும் நிலை ஏற்படும் என்பதற்கு மணலி புதுநகர் தனியார் நிறுவன ஊழியரே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments