மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கிறது அம்பன் புயல்

0 1659
மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கிறது அம்பன் புயல்

அம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா, மேற்குவங்கத்தில் தற்போது முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு அதிவேகமாக காற்று வீசி வருகிறது.

1999ம் ஆண்டுக்கு பின்னர் 21 ஆண்டுகள் கழித்து வங்கக் கடலில் உருவான மற்றொரு தீவிர புயல் அம்பான் இன்று மாலைக்குள் கரையைக் கடக்கிறது. 1999ம் ஆண்டு வீசிய புயலால் ஒடிசாவில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், அதே வகையில் தற்போது உருவாகியுள்ள புயலால் கடும் சேதம் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, அனைத்துவகை மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடும் புயலாக வடமேற்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் அம்பன், தற்போதைய நிலவரப்படி ஒடிசாவின் பாரதீப் பகுதியிலிருந்து 120 கிலோ மீட்டர் கிழக்கு - தென் கிழக்கு திசையில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மணிக்கு 18 முதல் 19 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் முதலே கரையை கடக்க துவங்கும் புயலானது மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுக்கிடையே சுந்தரவனக்காடுகளை ஒட்டிய பகுதியில் மாலையில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது மணிக்கு 155 முதல் 165 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், இடையிடையே மணிக்கு 185 கி.மீ வரை சூறாவளிக் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேற்கு வங்கத்தின் கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்திலுள்ள திகா பகுதியில் தற்போது முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது.ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் சந்திப்பூர் மற்றும் கேந்த்ரபாரா மாவட்டங்களில் பலத்த சூரைக்காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

பாரதீப் பகுதியில் தற்போதே மணிக்கு 102 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதாக ஒடிசாவின் சிறப்பு மீட்பு குழுவின் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அம்பன் புயலை முன்னிட்டு கொல்கத்தா விமான நிலையம் நாளை காலை 5 மணி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதை அடுத்து அங்கு நடந்து வரும் விமான சரக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அம்பன் புயலால் கொல்கத்தா நகரம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. 

ஹூக்ளி, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கணா மாவட்டங்களில் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் எனவும், கடல் அலைகள் 6 மீட்டர்அளவுக்கு உயர்ந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.மேற்கு வங்கத்தின் 7 மாவட்டங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் பாதிக்கப்படக் கூட பகுதிகளிலிருந்து சுமார் 4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தாக்கத்தால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய சூழல் நிலவுவதால், ஆயிரம் பேர் தங்கவைக்கப்படக் கூடிய இடங்களில் 500 பேர் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் மீட்பு குழுவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயலின் வால் பகுதியும் மோசமான பாதிப்புகளை உருவாக்கக் கூடும் என்பதால், நிலைமை சரியானதாக அறிவிக்கப்பட்ட பின்னரே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments