இந்தியாவில் 24 மணி நேரத்தில் 5,611 பேர் கொரோனாவால் பாதிப்பு

0 2120
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 5,611 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 750ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 303ஆகவும் அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை அண்மையில் கடந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, பலியானோரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 611 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 140 பேர் பலியாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் இதுவே மிகவும் அதிகபட்ச பாதிப்பு எனவும் மத்திய சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 750ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 303ஆகவும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 61 ஆயிரத்து 149 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுதவிர்த்து மருத்துவமனைகளில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் 42 ஆயிரத்து 298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத் ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 136ஆகவும், பலி எண்ணிக்கை ஆயிரத்து 325ஆகவும் உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 448ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 84ஆகவும் அதிகரித்துள்ளது. குஜராத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 140ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 719ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments