பெண் போலீஸ் கையை முறித்த கஞ்சா வியாபாரி..! ரூ.20 லட்சம் பறிமுதல்

0 8839

வடிவேலு பட பாணியில் காவல் அதிகாரியை வீட்டுக்குள் வைத்து பூட்டிச்சென்ற பிரபல பெண் கஞ்சாவியாபாரி ஒருவர் தற்போது பெண் போலீசை கையை முறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்குள் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்களாகவும், சில்லரை குவியலாகவும் 20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

பெண் கஞ்சா வியாபாரியை பிடிக்க கம்பீரமாக வீட்டிற்குள் சென்ற போலீஸ் ஏட்டு வடிவேலு ஆடையின்றி ஒழியும் நிலைக்கு தள்ளப்படும் இந்த காமெடிக்காட்சி வெகு பிரபலம்..! இதேபோன்று வாணியம்பாடியில் பல வருடங்களுக்கு முன்பு தனியாக சிக்கிய காவல் அதிகாரி ஒருவரை கடித்து விட்டு வீட்டிற்குள் வைத்து பூட்டிச்சென்றவர் கஞ்சா வியாபரி மகேஸ்வரி. தற்போது எரிசாராயம் மற்றும் கஞ்சா வியாபாரத்தை குடும்ப தொழிலாக செய்து வந்த இவர் மீண்டும் போலீசை தாக்கி கையை முறித்துள்ளார்..!

வாணியம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் அறிந்து அங்கு சோதனைக்கு சென்ற தனிப்படை போலீசாரை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கிய மகேஸ்வரி, மடக்கி பிடிக்க முயன்ற சூர்யா என்ற பெண் போலீசில் கையை முறித்து தூக்கி வீசியுள்ளார். இதையடுத்து துப்பாக்கி முனையில் அவரையும் அவரது கணவர் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகேஸ்வரியின் வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த 21கிலோ கஞ்சாவையும், கட்டுகட்டுக்களாய் பானையில் போட்டு வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களையும் சில்லரை காசு மூட்டைகளையும் போலீசார் கைப்பற்றினர். அதில் மொத்தம் 20 லட்சம் ரூபாய் இருந்தது.

போதை பொருள் கடத்தல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் ,கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் அரசு கையகப்படுத்த முழு அதிகாரம் உள்ளதால் கஞ்சா வியாபாரி மகேஸ்வரியின் பெயரில் உள்ள 40 வீட்டு பத்திரங்களையும் போலீசார் கைபற்றியுள்ளதாகவும் மற்ற சொத்துக்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்

புல்லட், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் என மகேஸ்வரி அந்த பகுதியில் குட்டி தாதா போல வலம் வந்துள்ளார். கஞ்சா விற்பனை மற்றும் சாராய விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தால் சம்ந்தப்பட்ட நபர்களை தாக்குவதையும் வாடிக்கையாக செய்துள்ளார் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

வழக்கமாக போலீசிடம் சிக்கி வழுக்கி விழுபவர்களுக்கு தான் மாவுகட்டு போடப்படும், ஆனால் இங்கே போலீசுக்கே மாவுகட்டு போடக்காரணமாக இருந்த கஞ்சா வியாபாரி மகேஸ்வரியும் விரைவில் வழுக்கி விழுவார் என எதிர்பார்க்கலாம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments