லிட்டில் பிரின்ஸஸ் பார்த்த வேலையால் குடும்பத்துக்கே போக்சோ..! காதலன் – கணவனும் சிக்கினர்

0 17468

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 17 வயது சிறுமியை காதலித்த இளைஞர், காதலை தவிர்க்க அவசர திருமணம் செய்து வைத்த பெற்றோர், மாமனார், மாமியார், கணவர் என 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்தன்று இரவில் கணவனை உதறி, காதலனை அழைத்ததால் நிகழ்ந்த விபரீத சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

பெரும்பாலும் பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில், அப்பாக்களுக்கு பெண்குழந்தைகள் தான் செல்லமாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு செல்லகுழந்தை தான் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த 17 வயது சிறுமி..!

அந்த சிறுமி கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தினமும் கல்லூரி சென்று வந்த போது சாலையோரம் கடைவைத்திருந்த சுதீஷ் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகின்றது. அந்த மாணவிக்கு 17 வயது தான் ஆகிறது என்பது தெரியாமலேயே சுதீசும் காதல் கீதம் பாடியுள்ளார்.

இந்த விவரம் அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவர, ஊரடங்கு நேரத்திலும் காதலனுடன் செல்போனில் பேசி வந்த மகளுக்கு, அவசர அவசரமாக தங்கள் சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பேசி முடித்துள்ளனர். இரு வீட்டு பெற்றோர் மட்டும் கலந்து கொள்ள காதோடு காது வைத்தார்போல் மாணவியின் வீட்டில் வைத்தே கமுக்கமாக நடந்து முடிந்துள்ளது திருமணம் .

திருமணத்தன்று இரவு அறைக்குள் கணவர் சென்ற போது அந்த மாணவி தனது காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை... என்று அந்த ஏழு நாட்கள் அம்பிகா போல அழுததால், உருகிபோன கணவர் விவேக், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து சென்று விட, உடனடியாக வீட்டிற்கு தனது காதலனை வரவழைத்துள்ளார் அந்த மாணவி..!

விவகாரம் தெரியாமல் ஆசையோடு ஏறிக்குதித்து வீட்டிற்குள் நுழைந்த காதலன், கையும் களவுமாக அந்த மாணவியின் தந்தையிடம் சிக்கி உள்ளான். திருமணத்திற்கே அழைக்காதவன் இரவில் வீட்டிற்கு வந்த பின்னணி குறித்து விசாரித்த போது, தங்கள் செல்லமகள் அழைப்பின் பேரில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரோட்டோர காதலனை சிறப்பாக கவனித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

தனது காதலனை காப்பாற்றுவதாக நினைத்து தனக்கு 17 வயது தான் ஆவதாகவும், பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக போலீசாரிடம் நேக்காக போட்டுக் கொடுத்துள்ளார் அந்த மாணவி. ஆனால் காவல்துறையினர் மாணவியின் பெற்றோருடன் சேர்த்து காதலன் சுதீஷையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

மாணவிக்கு 17 வயது மட்டுமே ஆவதால் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய் தந்தை, தாலிகட்டி தலைமறைவு தியாகியான கணவர் விவேக், மாமனார், மாமியார் ஆகியோர் மீதும் சிறுமியின் மனதை காதல் ஆசை காட்டி கெடுத்ததாக காதலன் சுதீஷ் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே தங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யபோவதை அறிந்த மாணவியின் பெற்றொர், மற்றும் மாமனார் மாமியார் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி விட்டனர். எப்படியும் மாணவியை தன்னுடன் அனுப்பி வைத்து விடுவார்கள் என்று இலவுகாத்த கிளிபோல காவல் நிலையத்தில் காத்திருந்த காதலன் சுதீஷ் போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டார்.

தன்னை பாசம் காட்டி வளர்த்தவர்கள், நேசித்தவர், நம்பி கரம் பிடித்தவர், கரம் பிடித்தவரை பெற்றவர்கள் என ஒட்டு மொத்தமாக 6 பேரை போக்சோ வழக்கில் சிக்கவைத்த அந்த லிட்டில் பிரின்சஸ் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் மன அமைத்திக்காக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்.

படிக்கின்ற வயதில் மனதை கெடுக்க சமூகத்தில் நிறைய விஷயங்கள் சுற்றிவரும். 18 வயதுக்கு குறைவான சிறுமியே விரும்பி காதலித்தாலும், புகார் என்று வந்தால் காதலனுக்கு ஜெயில் நிச்சயம், காதலை தடுப்பதாக நினைத்து திருமண ஏற்பாடு செய்தால் பெற்றோருக்கும் சிறை கதவுகள் திறந்தே இருக்கும் என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments