அபுதாபியில் தவிக்கும் தமிழர்கள்..! அனுமதிக்காக காத்திருப்பு

0 5473
அபுதாபியில் தவிக்கும் தமிழர்கள்..! அனுமதிக்காக காத்திருப்பு

தமிழகத்தில் இருந்து அபுதாபிக்கு வேலைக்கு சென்ற 900 தமிழர்கள் விமான சேவையின்றி தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். அபுதாபியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தங்களை குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அபுதாபியை தலை நகராகக் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இதுவரை 24 ஆயிரம் பேர் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். 226 பேர் உயிரிழந்துள்ளனர்.ஞாயிற்றுகிழமை ஒரே நாளில் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றது.

குறிப்பாக வெளி நாடுகளில் இருந்து பணி நிமித்தமாக வந்து பணி முடிந்த பின்னரும், விசா முடிந்த பின்னரும் தங்கி இருப்பவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக அபுதாபி விமான நிலையத்தில் தீவிரப்பரிசோதனைகளுக்கு பின்னரே பயண அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் 5 கட்டமாக நவீன பரிசோதனை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் இருந்து அபுதாபியில் உள்ள தஹீர் ரிபைனரி என்ற கம்பெனிக்கு 900 தமிழர்கள் உள்பட 1700 பேர் கடந்த ஜனவரி மாதம் பணிக்கு சென்றுள்ளனர். அங்கு மார்ச் மாதம் பணி முடிந்து திரும்பும் நிலையில் கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ளனர். அவர்களுக்கான விசாவும் முடிவுற்ற நிலையில் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தயாராக உள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் விமான டிக்கெட் எடுத்து தர சம்மத்தித்த நிலையில் இதுவரை அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் அனுமதிக்க படாததால் தாங்கள் தாய் நாடு திரும்ப இயலாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். அங்கு தமிழர்கள் மட்டுமல்ல குஜராத்தை சேர்ந்த 350 பேர், கேரளாவை சேர்ந்த 150 பேர், ஆந்திரா, உத்தரபிரதேசம், மற்றும் டெல்லியை சேர்ந்த 300 பேர் என மொத்தம் உள்ள 1700 பேரையும் தாயகம் அழைத்து செல்ல வேண்டும் என்று அங்குள்ள பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாங்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை முடிந்து நோய் தொற்று இல்லாமல் நலமாக இருப்பதாக சான்று வைத்திருப்பதால் தங்களை எப்படியாவது தங்கள் குடும்பத்தினருடன் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மத்திய மாநில அரசுகளை பொறுத்தவரை அயல் நாடுகளில் இருந்து நாடு திரும்ப இயலாமல் தவித்து வரும் நம்மவர்களை மீண்டுக் கொண்டுவரவும், இங்கிருந்து அயல் நாடுகளுக்கு செல்வோருக்கும் தேவையான அனுமதியை வழங்கி வருவகிறது. கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மிகச்சில விமானங்களே இயக்கப்படுவதால் தொழிலாளர்களை மீட்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்களின் கையில் இருக்கும் மீதி திரவியம், காலியாகும் முன்னராவது, அவர்களை சொந்தங்களிடம் சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments