கல்விக்காக 12 புதிய தொலைக்காட்சிகள் துவக்கம் : நிர்மலா சீதாராமன் தகவல்

பள்ளிக் கல்விக்காக ஏற்கெனவே 3 தொலைக்காட்சிகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேலும் 12 புதிய சேனல்கள் துவக்கப்படும் என அறிவித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்விப் பணியில் அனைத்து நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார். 1 முதல் 12 - வது வகுப்பு வரை மாணவர்களுக்காக தலா ஒரு சேனல் இயங்கும் என்றும், ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையேயான உரையாடல் குறித்து புதிய தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
ஸ்வயம் பிரபா சேனல்கள் மூலம் இ-லேர்னிங் எனப்படும் மின்னணு கற்றல் ஊக்குவிக்கப்படும் என்று கூறிய அவர், கொரோனா காலத்தில் ஆன்லைனில் புதிதாக 200 மின்னனு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் டிடிஎச் நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் கல்வி தொடர்பாக ஒளிபரப்பு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Comments