வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு

0 25371
வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்த 3ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் நிறைவடையும் நிலையில், வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. 3ஆம் கட்ட ஊரடங்கு இரவு 12 மணியுடன் நிறைவடையும் நிலையில், பல்வேறு வரைமுறைகள், தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து வித கல்வி நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்தவும், மதம்சார்ந்த கூட்டங்கள் நடத்தவும் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல்
பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் திறக்கப்படுவதற்குமான தடையும் நீடிக்கிறது.

சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவும், விமானம், இரயில், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற பகுதிகளுக்கான இரயில் போக்குவரத்து ஆகியவற்றுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.

அதே சமயம் மத்திய, மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், இரயில், பொதுப்பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும். மேலும் மெட்ரோ இரயில், மின்சார இரயில் இயக்கத்திற்கும், கால்டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்குவதற்குமான தடை நீடிக்கிறது.

பணியாளர் விடுதிகள் தவிர பிற தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் இயங்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும் என்றும், இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்ட ஆலோசனை முடிவுகளின் அடிப்படையில், தமிழகத்தில் 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்றும், தளர்வுகள் ஏதும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் குறைவாக உள்ள 25 மாவட்டங்களில் புதிதாக சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, ஆகிய மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-pass தேவையில்லை என தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வர TN e-pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேரும், வேன்களில் 7 பேரும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 25 மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட 50 சதவீத பணியாளர்களை 100 சதவீதமாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தவிர பிற பகுதிகளில் 100 பேருக்கு குறைவானோர் பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் TN e-pass உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்கு விலக்களிக்கப்படுகிறது.

 ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், 5 நபர்களுக்கு மேல் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments