ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மேலும் 40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

0 6442
ரூ.21 லட்சம் கோடியில் பொருளாதார ஊக்குவிப்புக்கான தற்சார்பு இந்தியா திட்டம்

தற்சார்பு இந்தியா திட்டத்தின் 5வது மற்றும் இறுதிக் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். முக்கியமாக ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மேலும் 40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி அறிவித்த 21 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக அறிவித்து வந்தார். இந்நிலையில் 5வது மற்றும் கடைசி கட்ட அறிவிப்பை இன்று வெளியிட்ட அவர், 7 துறை சார் அறிவிப்புகளை வெளியிட்டார்.

முன்னதாக மத்திய அரசு சார்பில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி 16 ஆயிரத்து 349 கோடி ரூபாய் 8.19 கோடி விவசாயிகளுக்கு தலா2 ஆயிரம் ரூபாய் வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஜன் தன் கணக்கு மூலம் 20 கோடி பெண்களுக்கு 10 ஆயிரத்து 025 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 2.2 கோடி தொழிலாளர்கள் 3 ஆயிரத்து 950 கோடி நிதியுதவி பெற்றுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என அறிவித்தார். மேலும் அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார்.

6.81 கோடி பேர் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுள்ளதாக தெரிவித்த மத்திய நிதியமைச்சர், கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலங்களுக்கு இதுவரை 4,113 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆய்வகங்கள், சோதனை கிட்களுக்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், 11.08 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், 51 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 87 லட்சம் என் - 95 மாஸ்க்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என அறிவித்த அவர், ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு கூடுதலாக 40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments