நாளை முதல் ஊரடங்கு 4.0 - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

0 13943
தமிழகத்தின் 5 நகரங்கள் உட்பட 30 நகரங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு

நாளை முதல் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், பாதிப்பு அதிகமாக உள்ள சென்னை, மும்பை உள்ளிட்ட 30 நகரங்களில் ஊரடங்கு அதிகபட்ச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று இரவு முடிய உள்ள நிலையில், நாளை முதல் 4ம் கட்டமாக ஊரடங்கை நீடிப்பதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் அரியலூர் உள்ளிட்ட 30 நகரங்களுக்கு அதிகபட்சமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள இந்த 30 நகரங்கள் தான் இந்தியாவின் 80 சதவீத கொரோனா பரவலுக்குக் காரணமாக இருக்கின்றன. இதில் மகாராஷ்ட்ராவும் தமிழ்நாடும் மூன்றில் ஒரு பங்கு கொரோனாவை உற்பத்தி செய்து வருகின்றன. இதனால் இத்தகைய நகரங்களுக்கு மிகவும் அதிகபட்சமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்த 12 மாநிலங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அத்துறையின் மத்திய செயலர் ப்ரீத்தி சூடன் ஆலோசனை நடத்தினார். நோய்ப் பரவல் எண்ணிக்கை, உயிரிழப்புகளின் எண்ணிக்கை, நோய் இரட்டிப்பாகும் நாள் விகிதம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளின் அடிப்படையில் அந்த விவாதம் நடைபெற்றது. கொரோனோ பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் அவர் ஆலோசித்தார்.

மும்பையின் தாராவி போன்ற பகுதிகளில் பரவி வரும் கொரோனா தடுப்பு குறித்தும் சுகாதாரத்துறை செயலர் மாநில சுகாதார அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்டோ , டாக்சி, பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதலை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களையும் வினியோகம் செய்வதற்கு, ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாதிப்பு அதிகளவில் உள்ள சிவப்பு மண்டலங்களை மறு ஆய்வுக்குட்படுத்தவும் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments