தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறப்பு..!

0 3311

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் தவிர, தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. கடை ஊழியர்களுக்கும், மதுவாங்க வருவோருக்கும் டாஸ்மாக் நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் மூலமே மதுவை விற்கவும் அறிவுறுத்தியது. இதனை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நிபந்தனைகளுக்குட்பட்டு மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கும், மதுக்கடைகளை மூட வேண்டும் என கடந்த 8-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து, மதுபானக் கடைகள் இன்று திறக்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. 

டாஸ்மாக் ஊழியர்களுக்கும், மதுவாங்க வருவோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடை ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன்களும், நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்களும் மட்டுமே வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு 750 மில்லி அளவுள்ள ஒரு பாட்டில் அல்லது 375 மில்லி கொண்ட இரு பாட்டில்கள் அல்லது 180 மில்லி அளவுள்ள 4 பாட்டில்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது

தடுப்புகள் மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், பணியாளர்கள் அனைவரும் கையுறை, முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அரசு கூறியுள்ள வயது முறையில் டோக்கன் வழங்குதல் கட்டாயம் என்று கூறியுள்ள டாஸ்மாக் நிர்வாகம், தவறுகள் மேற்கொள்ளும் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments