வெளி மாவட்டங்களில் சிக்கியுள்ள மாணவர்கள் தேர்வு எழுதுவது எப்படி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

0 573

ஊரடங்கு காரணமாக வேறு மாவட்டங்களில் சிக்கியுள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தேர்வு எழுதுவதற்கோ அல்லது அவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சமூக பரவலாக மாறுவதை தடுக்க தமிழகம் முழுவதும் பொதுபோக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதனிடையே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11,12 ஆம் வகுப்புகளில் விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கிற்கு முன்பே, பள்ளி விடுமுறை காரணமாக பல்வேறு ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் அந்தந்த இடங்களிலேயே சிக்கியுள்ளனர்.

போக்குவரத்து இயங்காத நிலையில், மாணவர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதுவது கேள்விகுறியாக இருந்தது. இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வெளி மாவட்டங்களில் சிக்கியுள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தேர்வு எழுதுவதற்கோ அல்லது அவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வது, தேர்வெழுத வரும் மாணவர்களின் முழு பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து தொடர்ந்து முதலமைச்சரிடம் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது என்றும், இது குறித்த விரிவான தெளிவான அறிக்கை வருகிற 19-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments