பள்ளி பேருந்து ஓட்டுனரை கார் ஏற்றி கொன்ற மனைவி..! செல்போன் வாக்குமூலத்தால் சிக்கினார்

0 31427

விழுப்புரம் அடுத்த காட்டேரிகுப்பத்தில் பள்ளி பேருந்து ஓட்டுனர் ஒருவரை, அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.  செல்போன் வாக்கு மூலத்தால் கொலையாளிகள் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

விழுப்புரம் அடுத்த காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவர் கந்தசாமி இவர் தொண்டமா நத்தம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் புவனேஸ்வரி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி காட்டேரி குப்பத்தில் இருந்து புதுச்சேரி டவுனுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அந்தவழியாக சென்ற இண்டிகா கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கந்தசாமி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் விபத்தில் பலியனாதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கந்தசாமியின் தாய், தனது மகன் தன்னிடம் செல்போனில் அளித்த மரண வாக்குமூலம் என்று 10 நிமிட ஆடியோவை கொடுத்துள்ளார். அந்த ஆடியோ விபத்து நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு தனது மனைவியின் சகோதரனும்,மனைவியுடன் நெருக்கமாக பழகி வரும் ஓட்டுனர் ஸ்ரீதர் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், தனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் தனது மனைவி புவனேஸ்வரியும் அவரது குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுனர் ஸ்ரீதர் என்பதை விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து கந்தசாமியின் உயிரிழப்புக்கு காரணமான இண்டிகா கார் ஓட்டுனர் பிரவீன்குமாரை பிடித்து விசாரித்த போது அவர் விபத்துக்கு பின்னர் ஓட்டுனர் ஸ்ரீதர் உடன் பேசி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதரை பிடித்து விசாரித்த போது கந்தசாமி கொலை வழக்கில் மர்ம முடிச்சுக்கள் அவிழத்தொடங்கின.

தொண்டமாநத்தம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த கந்தசாமி தனது நண்பரான ஸ்ரீதரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது கூலிங்கிளசுடன் வீட்டிற்கு விதவிதமான திண்பண்டங்களையும், புவனேசுவரிக்கு பரிசு பொருட்களையும் கொடுத்து அவரை கவர்ந்துள்ளான் ஸ்ரீதர். இதனால் அவனுடன் புவனேசுவரிக்கு முறையற்ற காதல் உருவாகி உள்ளது.தினமும் ஸ்ரீதர் உடன் மணிக்கணக்கில் செல்போனிலும் புவனேசுவரி பேசிவந்துள்ளார்.

தனது மனைவியின் தவறான நடவடிக்கையை கந்தசாமி கண்டித்துள்ளார். இதனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் புவனேசுவரி கூடப்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். தனது கணவர் தன் மீது சந்தேகம் கொண்டு அடிப்பதாக சகோதரரிடம் கூறியுள்ளார். இதனால் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துவர சென்ற கந்தசாமியை புவனேசுவரியின் சகோதரர் அடித்து விரட்டி உள்ளார்.

கூட்டாளியால் தனது வாழ்க்கை வீதிக்கு வந்துவிட்டது என்று விரக்தி அடைந்த கந்தசாமி தனது மனைவியை எப்படியும் தன்னுடன் அழைத்து வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். அதே நேரத்தில் கந்தசாமி உயிரோடு இருந்தால் முறையற்ற காதலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என்று ஸ்ரீதரும், புவனேசுவரியும் சேர்ந்து அவரை கார் ஏற்றி தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். கார் மோதி இறந்தால் விபத்து என்று நினைத்து விடுவார்கள் என்று நினைத்துள்ளனர்.

அதன்படி கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற கந்தசாமியை, தனது நண்பர் பிரவீன்குமாரை ஏவி கார் ஏற்றி கொலை செய்ததை ஸ்ரீதர் ஒப்புக் கொண்டதக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் ஒருவாரம் முன்பாக கந்தசாமி தெரிவித்த செல்போன் வாக்குமூலம் அவர்களை சிக்கவைத்து விட்டது.இதையடுத்து விபத்து வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டு கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரி, ஸ்ரீதர், பிரவீன்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பசுங்கிளிகளின் கூட்டுக்குள் கரு நாகம் புகுந்தது போல வில்லங்க நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்ததால் ஒரு குடும்பமே சின்னாபின்னமாகியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இந்த கொலை சம்பவமும் ஒரு சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments