கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-பிரதமர் நரேந்திர மோடி

0 21113
மே.17க்கு பின்னர் நீட்டிக்கப்படும் ஊரடங்கு புதிய வடிவில், புதிய விதிகளுடன் இருக்கும்

நாடு தழுவிய ஊரடங்கை 4வது முறையாக நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளின் பரிந்துரைகளை ஏற்று வரும் 18ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். 

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக 3வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகம் கடந்த 4 மாதமாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது என்றும், 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸ் எல்லோரது வாழ்க்கையும் புரட்டிப் போட்டுள்ளது என்றும், மனித குலத்திற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த உலகமுமே கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறது என்று கூறிய பிரதமர், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல என்று தெரிவித்தார்.

கொரோனா பாதிப்புக்கு முன், பிபிஇ கிட்டுகள், என்-95 மாஸ்குகளை இந்தியா தயாரித்திருக்கவில்லை என்றும், தற்போது நாள்தோறும் 2 லட்சத்திற்கு மேல் பிபிஇ கிட்டுகள், என்-95 மாஸ்குகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகவும் பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று நீண்ட காலம், நம்முடன் இருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர்,
கொரோனாவிலிருந்து தப்பிக்க, முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாட்டில் 4ஆவது முறையாக அமலாகும் ஊரடங்கு, மற்றவற்றிலிருந்து வித்தியாசமாக புதிய வடிவில், புதிய விதிகளுடன் இருக்கும் என்று பிரதமர் சூசகமாக குறிப்பிட்டார். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வருகிற 18ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments