47 நாட்களுக்குப் பின்.. கடைகள் திறப்பு..!

0 4048

34 வகையான கடைகளைத் திறக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் டீ கடைகள் , துணிக்கடைகள், நாட்டு மருந்து கடைகள் மளிகை கடைகள், பழக்கடை மற்றும் சாலையோரம் உள்ள வண்டி கடைகள் என அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் டீக்கடைகள் டிபன்கடைகள் பூக்கடை உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது இயல்பு நிலைக்கு மெதுவாக திரும்பி வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் சாலைகளில் அதிகமாக பயணிப்பதை காண முடிந்தது. அதே வேளையில் சில இடங்களில் பொது மக்கள் முககவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

திருச்சியில் அரசின் உத்தரவையடுத்து டீக்கடைகள் இன்று 6 மணி முதல் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல பேக்கரிகள், பெட்டிக்கடைகள், ஜெராக்ஸ் கடைகள் மற்றும் உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் 25 சதவீத டீக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதால் கடைகளை திறந்தாலும் லாபம் சம்பாதிக்க இயலாது என டீக்கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

சேலத்தில் அரசு அறிவிப்பின்படி டீக்கடைகள் மற்றும் உணவகங்கள், எலெக்ட்ரானிக்ஸ் கடைகள், இருசக்கர வாகன விற்பனை கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சேலம் நகரப்பகுதி அஸ்தம்பட்டி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே சமயம் பெரிய நிறுவனங்கள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய தங்க நகை கடைகள் ஜவுளி நிறுவனங்கள் இன்று திறக்கப்படவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பொது போக்குவரத்து தவிர பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் இன்று செயல்பட ஆரம்பித்துள்ளன. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாத காரணத்தால் குறைவான டீக்கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் டீக்கடைகளில் பார்சல் பெறாமல் கூட்டமாக வாடிக்கையாளர்கள் நின்று டீ குடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னையின் மிக முக்கிய வர்த்தகப் பகுதியான பாண்டிபஜார் பகுதியிலும் துணிக்கடைகள் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பகுதியில் மக்கள் போக்குவரத்து அதிகரித்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. தளர்வு அளிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான கடைகளும் திறக்கப்பட்ட நிலையில் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலை மற்றும் மண்ணடி பகுதியில் ஜெராக்ஸ் கடைகள், தேநீர்கடைகள், பை விற்பனை கடைகள், மொபைல் மற்றும் கண்கண்ணாடி விற்பனை கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் என்.எஸ்.சி போஸ் சாலையில் ஒரு சில பகுதிகளில் குறுகிய இடங்களில் அதிக கடைகள் இருப்பதால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளில் மட்டும் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்லில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெரியகடைவீதி, பழனி சாலை, பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள கடைகளில் வாடிக்கையாளர்களும் வியாபாரிகளும் அரசின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வரும் காலங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையில் பெரும்பாலான நிறுவனங்கள் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மதுரையில் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தொழில் நிறுவனங்களுக்கு மக்கள் பரபரப்புடன் பணிக்குச் செல்லும் காட்சிகளை காண முடிந்தது. மேலும் புத்தகக் கடைகள், போட்டோ ஸ்டுடியோ, எழுது பொருள் விற்பனைக் கடைகள் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் கூடுதலாக செயல்பட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி தேனீர் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து தேனீர் அருந்துவதாக புகார் எழுந்துள்ளது.  அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டத்தால் தேனி நேரு சந்திப்பு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல மதுரை சாலையில் உள்ள பெரிய அளவிலான நகைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றித்திரியும் மக்கள் கூட்டத்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பியுள்ளது.  அண்ணாசாலை, மூஞ்சிக்கல், நாயுடுபுரம், டிப்போ உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது. ஜவுளிக்கடைகள் பர்னிச்சர்கள் செல்போன் விற்பனைகடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments