முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

0 2621
மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

பிரதமர் மோடி 5ஆவது முறையாக முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து, ஊரடங்கில் இருந்து வெளியேறும் திட்டம் குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழவதும் 3ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. முதல இரண்டு கட்டங்களில் இல்லாத அளவுக்கு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள இந்த 3ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா நேற்று ஆலோசனை நடத்தினார்.

மண்டலங்களாக பிரிப்பது,  கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிகளை தளர்வின்றி கடைப்பிடிப்பது, தளர்வுகளால் குழப்பமும், சீரற்ற நிலையும் ஏற்பட அனுமதிக்கக் கூடாது என அப்போது வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பற்ற அல்லது பாதிப்பு நீங்கிய பச்சை மண்டல பகுதிகளில் தொற்று பரவிவிடாமல் தடுக்க தீவிரமான, கடுமையான காப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு அப்போது மத்திய அமைச்சரவை செயலாளர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சுகாதாரப் பணியாளர்களுக்கு இடையூறற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவிலிருந்து பாதுகாப்பும், அதேநேரத்தில் படிப்படியாக பொருளாதார செயல்பாடுகளை அதிகரிப்பதும் அவசியம் என்று மாநில தலைமைச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மே 17ஆம் தேதிக்குப் பிறகு முடக்கத்தில் இருந்து எந்த பகுதிகளை விடுவிப்பது என்பது குறித்தும் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, மே 17ஆம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, 5ஆவது முறையாக காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆலோசனையில், அனைத்து முதலமைச்சர்களும் பேச அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவது அதேசமயம் பொருளாதாரச் செயல்பாடுகளை அதிகரிப்பது இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து 4ஆவது கட்ட ஊரடங்கு இருக்குமா, புதிதாக எத்தகைய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments