அதிகரிக்கும் உயிரிழப்பால்.. அச்சத்தில் அகிலம்..!

0 1644
2.80 லட்சத்தை தாண்டியது, கொரோனா உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்து உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ரஷியாவில், 7ஆவது நாளாக 10 ஆயிரம் பேருக்கு மேல், வைரஸ் தொற்று உறுதி ஆக, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.  உலகம் முழுவதும் 14 லட்சம் பேர், குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய அரக்கனின் பிடியில் சிக்கி, தவிக்கும் மக்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி உயர, உயிர்ப்பலி நிமிடத்திற்கு நிமிடம் உயர்ந்து வருகிறது.

அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 47 ஆயிரத்தை நெருங்கி விட்டது. அங்கு, ஒரே நாளில் 1500 பேரை கொரோனா காவு வாங்கியதால், உயிர்ப்பலி 80 ஆயிரத்தை கடந்து உயர்ந்து வருகிறது.

இங்கிலாந்தில் உயிரிழப்பு 31 ஆயிரத்து 600 ஐ நெருங்கி உள்ளது. அங்கு, 3 ஆயிரத்து 896 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு 2 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இத்தாலியில் உயிரிழப்பு 30 ஆயிரத்தை தாண்ட, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 666 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு இரையானோர் 26 ஆயிரத்து 500 ஐ நெருங்கி உள்ளது.

பிரான்சில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்து விட்டது.

ரஷியாவை பொறுத்தவரை, 7 - வது நாளாக 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 817 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. அங்கு ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர, கனடா, ஸ்வீடன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் கணிசமாக உயர்ந்து வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 2 லட்சத்து 80 ஆயிரத்து 500 - ஐ நெருங்க, வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தைக் கடந்துள்ளது.

சுமார் 48 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்க, 14 லட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments