டிக்டாக்கில் உதார் விட்டு திரிந்த "கைப்புள்ள" கும்பலால் நேர்ந்த விபரீதம்.. நடிக்க வற்புறுத்தியவர் அடித்துக் கொலை

0 8432

ரவுடியின் தம்பியை அடிமை போல டிக்டாக்கில் நடிக்க வற்புறுத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் போதையில் அடித்துக் கொல்லப்பட்டார். டிக்டாக்கில் உதார் விட்டு திரிந்த "கைப்புள்ள" கும்பலால் நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் அமர்ந்து தங்களை தாங்களே தாதாக்கள் போல டிக்டாக்கில் காட்டிக் கொண்ட இந்த கைபுள்ள கும்பலை சேர்ந்த போஸ் என்பவர் தான் விபரீதமாக அடித்து கொலை செய்யப்பட்டவர்..!

இந்த பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள ரவுடியான விஜய் என்பவரின் தலைமையில் ஒரு கும்பலும், ராபர்ட் என்பவர் தலைமையில் ஒரு கும்பலும் செயல்பட்டு வருகின்றது. இதில் டிக்டாக்கில் தங்களை ரவுடியாக நினைத்து வீடியோக்களை பதிவிடுவது ராபர்ட் கும்பலின் வழக்கம்....

இந்நிலையில், ரவுடி விஜய்யின் தம்பியை அழைத்து ராபர்ட் கும்பல் டிக்டாக்கில் தங்களிடம் அடி வாங்கும் அடிமையாக நடிக்க அழைத்து வம்பு செய்ததாக கூறப்படுகின்றது. அந்த கும்பலிடம் இருந்து தப்பியவர் தனது அண்ணனிடம் செல்போனில் தகவல் தெரிவிக்க, மதுவாங்குவதற்கு நீண்ட வரிசையில் கத்திருந்த ரவுடி விஜய், செல்போன் மூலம் ராபர்ட்டை எச்சரித்துள்ளாதாக சொல்லப்படுகிறது. அதற்கு இதே எச்சரிக்கையை தங்கள் ஏரியாவுக்கு வந்து சொல்லமுடியுமா ? என்று ராபர்ட்டும் அவரது கூட்டாளிகளும் எதிர் சவால் விட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து மது வாங்கியதும் தனது கூட்டாளிகள், அஜீத், ராஜசேகர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பலுடன் போதை ஏற்றிக் கொண்ட ரவுடி விஜய், சவால் விட்ட ராபர்ட்டை தேடி வக்கீல் தெருவுக்குள் நுழைந்துள்ளார்.
அப்போது மளிகைகடை அருகே கும்பலாக அமர்ந்து கொண்டு செல்போனில் கானா பாடல் ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்த ராபர்ட் கும்பலை சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படுகின்றது.

இதில் அடிதங்காமல் ராபர்ட் உள்ளிட்ட அனைவரும் ஓட கையில் சிக்கிய போஸ் என்ற இளைஞரை பிடித்து தலை , கை , கால், கன்னம் , மார்பு என உடல் முழுவதும் கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர். இதில் பலத்தகாயம் அடைந்த போஸ் பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது.

அவரை அப்படியே போட்டு விட்டு, ரவுடி விஜய் கும்பல் தப்பிவிட, மீண்டும் திரும்பி வந்த ராபர்ட்டின் கைபுள்ள கும்பல், போஸ்சின் சடலத்தை எடுத்துக் கொண்டு போய், தங்கள் நண்பன் விபத்தில் சிக்கியதாக கூறி சிகிச்சை அளிக்க முயன்றுள்ளது.

அங்கிருந்த மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் விரைந்த வந்த போலீசார் டிக்டாக்கில் தங்களை தாதாக்களாக நினைத்து வாழ்ந்து வந்த கைப்புள்ள கும்பலை பிடித்து விசாரித்த போது, நிஜரவுடி விஜய் கும்பலால் போஸ் தாக்கப்பட்டு உயிரிழந்ததை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து ரவுடி விஜய், அஜீத், உதயா, வருண்ராஜ்,அக்ரம், அகாஷா, ராஜசேகர் உள்ளிட்ட 7 பேர் கும்பலை பிடித்து விசாரித்து வருகின்றனர். தாங்கள் கையால் மட்டுமே அடித்ததாக விஜய் கும்பல் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், போஸ் கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதிபடுத்திய காவல்துறையினர் கையால் தாக்கியதற்கே உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு போஸ் பலகீனமாக இருந்தாரா? என்ற கேள்வியுடன் இந்த கொலை குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடா நட்பால் டிக்டாக்கிற்கு அடிமையாகி தெருமுனையில் கும்பலாக அமர்ந்து கொண்டு, கானா பாடல் வரிகளை நம்பி வம்பிழுத்த வாய்கொழுப்பு கும்பலால், இந்த விபரீத கொலை அரங்கேறி உள்ளதாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments