டாஸ்மாக் கடைகள் திறப்பு... குடிமகன்கள் கொண்டாட்டம்..

0 3846
டாஸ்மாக் கடைகள் திறப்பு... குடிமகன்கள் கொண்டாட்டம்..

சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு சில இடங்களில் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகிலுள்ள டாஸ்மாக் கடை சரியாக 10 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன்கள், கடையை திறக்க வந்த விற்பனையாளரை கரவொலி எழுப்பி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.கடை திறக்கப்பட்டவுடன் ஆர்வமுடன் மதுபானங்களை வாங்கி சென்றனர். மேலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதால், போலீசாருக்கு உதவியாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வயது மற்றும் நேரக்கட்டுப்பாட்டை மீறி வரிசையில் நின்றவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மதுபானக்கடை முன்பு, 8 மணி முதலே மதுபிரியர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனிநபர் இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், கடை திறக்கப்பட்டவுடன் ஆதார் அட்டையை காண்பித்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியில் டாஸ்மாக் திறக்கப்பட்டதை மதுபிரியர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.

மதுரை பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள மதுபான கடையில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். ஆதார் அட்டையுடன் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட வண்ண அனுமதி அட்டைகளையும் கொண்டு வந்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில், காலை முதலே ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், டோக்கன் வழங்கப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. தனிநபர் இடைவெளியை பின்பற்றி குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். 

விழுப்புரம் மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் வருவதால் நேற்று வரை திறக்கப்படாது எனக் கூறப்பட்ட திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை இன்று காலையில் திடீரென திறக்கப்பட்ட நிலையில், குடிமகன்கள் ஆர்வமுடன் வந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

திருச்சியில் 10 மணிக்கு திறக்கப்பட்ட மதுபானக் கடைகளுக்கு முன்பு, காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். பெரும்பாலான கடைகளில் தனிநபர் இடைவெளி கடைபிடிக்கப்பட்ட நிலையில், புத்தூர் 4ரோடு சந்திப்பில் செயல்படும் மதுக்கடையில் தனிநபர் இடைவெளி  கடைபிடிக்கப்படவில்லை

கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள 2 மதுபானக் கடைகளில் தனிநபர் இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன்கள், ஆர்வமுடன் மதுவாங்கி சென்றனர். இடைவெளியின்றி நின்றவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தி நிற்க வைத்தனர்.

சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. சேலம் நகர் பகுதியில் அமைந்துள்ள இரு டாஸ்மாக் கடைகளிலும் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மது வாங்கி சென்றனர்.

கோவை சித்தாபுதூர், புலியகுளம், சவுரிபாளையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். ஆதார் அட்டையுடன் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மதுவிற்பனை நடைபெற்றது.

ஈரோட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகளுடன் மதுவிற்பனை நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபிரியர்கள் ஆர்வமுடன் மதுபானங்களை வாங்கி சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments