கொரோனா மையமான கோயம்பேடு... அதிகரிக்கும் கொரோனா பச்திப்பு..!

0 4339
சென்னையில் கோயம்பேடு தொடர்பில் மேலும் 21 பேருக்கு கொரோனா

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை பகுதியில் மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் அந்த சந்தையிலிருந்து காய்கறி வாங்கி சென்ற பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக திகழும் கோயம்பேடு பகுதியில் கொரோனா பரவலால் நேற்று வரை 149 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கோயம்பேடு சந்தை, சேமத்தமன்நகர், அய்யப்பா நகர் ஆகிய இடங்களில் 21 பேருக்கு நோய் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு பகுதியில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதியான 21 பேரும் சுகாதார துறையினரால் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சென்னை காவலர் குடியிருப்புகளுக்கு கோயம்பேட்டில் இருந்து தினமும் காய்கறி வாங்கி வந்த புதுப்பேட்டையை சேர்ந்த தலைமைக் காவலருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர், மற்றும் அவர்கள்  வசிக்கும் காவலர் குடியிருப்பில் உள்ளோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அசோக் நகர் 11ஆவது தெருவில் கோயம்பேடு சென்று வந்த வியாபாரி ஒருவர் மூலம் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்த தெரு முழுவதும் அடைப்பு மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்காமல் சிரமபடுவதாகவும், இதை கருத்தில் கொண்டு, தள்ளுவண்டி மூலமாவது அத்தியாவசியப் பொருட்களை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்பேட்டில் இருந்து மொத்தமாக காய்கறிகள் வாங்கி வந்து வியாபாரம் செய்து வந்த 4 பேருக்கு திருவான்மியூரில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் திருவான்மியூரில் மேலும் 11 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

வேளச்சேரி நேரு நகரில் ஏற்கெனவே கோயம்பேடு வியாபாரி உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போது அவர்கள் மூலம் மேலும் 12 பேருக்கு நோய் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.

ஈக்காட்டுதாங்கல் பிள்ளையார்கோயில் முதல் தெருவில் 9 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. அதில் 5 பேர் பெண்கள் ஆவர்.
சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் கொரோனா தொற்று 8 பேருக்கு உறுதியாகியுள்ளது. அந்த 8 பேர்களில் ஒருவர் டி.எஸ்.பி ஆவார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றியவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது அவர், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

காஞ்சிபுரத்தில் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணிபுரிந்த 31 பேர் உட்பட 43 நபர்களுக்கு இன்று ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணி செய்த ஏழு நபர்களுக்கு நேற்று வைரஸ் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 31 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெளியிடங்களில் பணியாற்றி வந்த 12 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments