64 விமானங்கள் மூலமும், போர்க் கப்பல்கள் மூலமும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை

0 671

வெளிநாடுகளில் சிக்கியுள்ள 2 லட்சம் இந்தியர்களை விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் மூலம் திருப்பி அழைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை மற்றும் திருச்சிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விமானம் மூலம் மீட்கப்படும் நடவடிக்கைக்கு வந்தே பாரத் என்றும், கப்பல் மூலம் மீட்புக்கு சமுத்திர சேது என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, நாளை முதல் வரும் 13ம் தேதி வரை 64 விமானங்கள் இயக்கப்படுகின்றன. வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 14 ஆயிரம் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 கேரளாவில் இருந்து 15 விமானங்களும், தமிழகம் மற்றும் டெல்லியிலிருந்து தலா 11 விமானங்களும், மற்ற நகரங்களில் இருந்தும் மீதமுள்ள விமானங்களும் புறப்பட்டுச் செல்லும். அமெரிக்காவில் இருந்து வருவோரிடம் ஒரு லட்சம் ரூபாயும், இங்கிலாந்தில் இருந்து வருவோரிடம் 50 ஆயிரம் ரூபாயும், கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 9 விமானங்களும், திருச்சியில் இருந்து 2 விமானங்களும் பயணிகளை அழைத்துவர உள்ளன. அமெரிக்கா, துபாய், குவைத் ஆகிய நாடுகளுக்கும் கோலாலம்பூர், சிங்கப்பூர், மஸ்கட், லண்டன், மணிலா, டாக்கா உள்ளிட்ட நகரங்களுக்கும் இந்த விமானங்கள் இயக்கப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை அழைத்துவருகின்றன.

இதேபோல் மாலத்தீவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜலஸ்வா கப்பல் நாளை மறுநாளும், மகர் கப்பல் 10ம் தேதியும் மாலே சென்றடையும். இதுதவிர, ஐ.என்.எஸ். ஷர்துல் கப்பல் நாளை துபாய் சென்றடைகிறது. இந்த மூன்று கப்பல்களும் பயணிகளை ஏற்றிக் கொண்டு விரைவில் கொச்சியை வந்தடையும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments