கொரோனா தொற்று உறுதியான 4 பேரில் ஒருவர் தலைமறைவால் விழுப்புரத்தில் பரபரப்பு

0 4065

விழுப்புரத்தில் மருத்துவமனைகளில் இருந்து தவறாக விடுவிக்கப்பட்ட  கொரோனா நோயாளிகள் 4 பேரில் 3 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,  டெல்லியை சேர்ந்த 4ஆவது நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

 விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கொரானா தற்காலிக சிகிச்சை மையம் ஆகிய இடங்களில் கொரோனா பாதித்தோர், அவர்களுடன் தொடர்பிலிருந்தோர் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 46 பேருக்கு கொரோனா இல்லை எனக் கூறி, அங்கிருந்த மருத்துவ ஊழியர்களால் செவ்வாய்கிழமை காலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களில் 4 பேருக்கு கொரோனா இருந்ததும், தவறாக அவர்கள் மருத்துவ துறை ஊழியர்களால் விடுவிக்கப்பட்டதும் செவ்வாய்கிழமை மதியமே அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. 

 இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவ துறை அதிகாரிகள், மருத்துவமனையில் இருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் 4 பேரையும் கண்டுபிடித்து தரும்படி காவல்துறையை நாடினர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறை, தவறுதலாக விடுவிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் 4 பேரில் 3 பேர், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் உடனடியாக தேடி கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து 3 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

தவறுதலாக விடுவிக்கப்பட்ட 4ஆவது நபர், டெல்லியை சேர்ந்த 30 வயதான நிதிஷ் சர்மா ஆவார். டெல்லி படேல் நகரை சேர்ந்த அவர், வேலை தேடி புதுச்சேரிக்கு முதலில் வந்துள்ளார். பின்னர் விழுப்புரம் வந்த அவர், வேலை கிடைக்காததால் டெல்லி திரும்பி செல்ல முயன்றுள்ளார். ரயில், பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதால் விழுப்புரத்திலேயே பின்னர் சுற்றி திரிந்து வந்துள்ளார். தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸார் அவரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகின நிலையிலும் தவறாக விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அவரை தீவிரமாக தேடும் பணி நடைபெறுகிறது. 

 அவர் குறித்து தகவல் தெரிந்தால் 04146-223265 என்ற எண்ணை தொடர்பு தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments