மோகத்தில் கர்ப்பிணியாகி.. கோபத்தில் கொலைக்காரியான பள்ளி மாணவி.. விபரீத 2K Kids..!

0 39323

நாமக்கல் அருகே காதலுக்கு இடையூறாக இருந்த சகோதரியை, காதலனை அழைத்து வந்து கொலை செய்த 12 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்தனர்.

படிக்கிற வயதில் காதலுக்கு இரையாகி கர்ப்பிணியான மாணவி கோபத்தில் கொலைகாரியான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...நாமக்கல் அடுத்த கொசவம்பட்டியை சேர்ந்த சந்திரன் வத்சலா தம்பதிகளுக்கு மணிகண்டன் என்ற மகனும் 2 மகள்களும் இருந்தனர். மூத்தமகள் மோனிஷா கல்லூரியில் முதலாம் ஆண்டும், இளையமகள் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பும் படித்து வந்தார்.

ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த 24 ஆம் தேதியன்று மோனிஷா வீட்டில் தனியாக இருந்த போது கை அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததாக அவரது தங்கை உறவினர்கள் மற்றும் தாயிடம் தெரிவித்து உள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மோனிஷாவை நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோனிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்

மோனிஷா தற்கொலை தான் செய்து கொண்டதாக நினைத்து போலீசாரும் உறவினர்களும் முடிவு செய்த நிலையில், மோனிஷாவின் அண்ணன் மணிகண்டன் தனது தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என நாமக்கல் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்ததால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.இதையடுத்து தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக மாற்றப்பட்டு விசாரணையை முன்னெடுத்தார் காவல் ஆய்வாளர் செல்வராஜ்.

மோனிஷாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்திய போது சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் ராகுல் என்பவன் தனது வீட்டின் மாடிப் பகுதியில் இருந்து இறங்கி ஓடியதாக மோனிஷாவின் தாய் வத்சலா தெரிவித்தார். இதையடுத்து ராகுலை பிடித்து சிறப்பான கவனிப்புடன் விசாரணை நடத்திய போது மோனிஷா மரணத்தின் மர்மம் விலகியது. ராகுல் கொடுத்த தகவலின் பேரில் மோனிஷாவின் தங்கையையும் பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

ராகுலும் , மோனிஷாவின் தங்கையும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் சந்திப்பதை வழக்கமாக்கி கொண்டதை பார்த்துவிட்ட மோனிஷா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளி படிக்கிற வயசுல காதலில் விழுந்த தங்கையை வீட்டில் இருப்போர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.அதன்பின்னரும் காதலை கைவிடாததால் வீட்டில் உள்ளவர்கள் தள்ளிவைத்து விட்ட நிலையில் மோனிஷாவின் தங்கை கர்ப்பமானதாக கூறப்படுகின்றது.

இதனை குடும்பத்தினரிடம் மோனிஷா காட்டிக் கொடுத்து விட்டதால் அவர் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்த தங்கை, சம்பவத்தன்று வீட்டில் மோனிஷா அயர்ந்து தூங்குவதை பார்த்து பழிதீர்த்துக்கொள்ள திட்டமிட்டு காதலன் ராகுலை வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மோனிஷாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் தற்கொலை போல இருக்க வேண்டும் என்பதற்காக மோனிஷாவின் கையில் நரம்பை அறுத்து விட்டு ராகுல் தப்பிச்சென்றுள்ளான். தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நடித்து தடயங்களை அழிப்பதற்காக மோனிஷாவை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று நாடகமாடியதாக வாக்கு மூலம் அளித்து திடுக்கிடவைத்துள்ளார்.

இதையடுத்து கர்ப்பிணியான பள்ளி மாணவி மற்றும் கல்லூரி காதலன் ராகுல் ஆகிய இருவர் மீதும் கொலைவழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். படிக்கின்ற வயதில் காதல் மோகத்தால் கர்ப்பிணியாகி, தீராத கோபத்தால் கொலைகாரியாகி காதலனுடன் சிறைக்கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்த 12 ஆம் வகுப்பு மாணவி..! பதின் பருவத்தில், படிப்பை மறந்து கவனத்தை சிதறவிட்டால், வாழ்க்கை பாழாகிவிடும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கின்றது இந்த சோக சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments