ஊரடங்கிற்குப் பின் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்னென்ன?பட்டியிலிடுமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு...!

0 4042

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டபின் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டிய துறைகளை பட்டியலிடுமாறு, மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்களுடன் நேற்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஊரடங்கு விலக்கப்பட்டபின் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டிய முதல் 10 துறைகளையும் 10 முக்கிய முடிவுகளையும் பட்டியலிட அவர் அறிவுறுத்தினார். கொரோனா ஆபத்து குறைவதைப் பொறுத்து மெதுவாகத் தொடங்க வேண்டிய துறைகள் குறித்த தரவரிசைத் திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட்டார்.

ஊரடங்கு முடிவுக்கு வரும் போது முதல்கட்டமாக எதிர்கொள்ளவேண்டிய நிலைமைகள், கொரோனா நிலையை அறிய மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் நெருங்கிய தொடர்பு, கள்ளச்சந்தை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க திறன் வாய்ந்த கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவால் பொருளாதார பாதிப்புகளை சீரமைக்கும் வகையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார்.

கொரொனா நெருக்கடி ஆய்வுகள் மூலம் மருத்துவத் துறையில் சுயசார்புத் தன்மையை அடைவதற்கான வாய்ப்பை அளித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

விவசாயிகள் நலனுக்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும், அறுவடைக் காலத்தில் சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments