தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்

0 22375

தமிழ்நாட்டிற்கு, 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வர உள்ளதாகவும், வருகிற 10ஆம் தேதி முதல் கொரோனா துரித பரிசோதனை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நோய் அறிகுறி இல்லாத சிலருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில், மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறினார். தமிழ்நாடு முழுவதும், மருத்துவமனைகளில் 22049 கொரோனா படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், மேலும், 2500 வெண்டிலேட்டர்கள் வாங்க, ஆர்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் கூறினார்.

கொரோனா பாதிப்பு விரைவாக கண்டறியும் பரிசோதனை முறையான ரேபிட் டெஸ்ட் மூலம், அரை மணி நேரத்தில், கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்றார். இந்த ரேபிட் டெஸ்ட் மேற்கொள்வதற்காக, ஒரு லட்சம் கிட்டுகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் தெரிவித்தார்.

ரேபிட் டெஸ்ட் கிட்டுகள், வரும் 9ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்துவிடும் என்றும், வருகிற 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் கொரோனா விரைவு பரிசோதனை தொடங்கும் என்றும், முதலமைச்சர் அறிவித்தார்.

தடை உத்தரவை மீறியவர் மீது சுமார் 95 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்களில் பலர் தங்களை தாங்கே முழுமையாக தனிமைப்படுத்திக் கொள்ளாதது தான் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோய் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்றார்.

தமிழ்நாட்டில், நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில், ஊரடங்கு நிறைவடைந்த பிறகு, கொரோனாவை தாக்கத்தை பொறுத்தே, பள்ளித் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

டெல்லி சென்று திரும்பியவர்கள் குறித்த எண்ணிக்கை தோராயமானதுதான் என்றும், எனவே, அங்கு சென்று திரும்பியோரில் எஞ்சியோர், தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

நோய் என்பது இயற்கையாக வருவது தான் என்றும், அதற்கு சிகிச்சை தான் தீர்வு என்றும், முதலமைச்சர் கூறியுள்ளார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களில், விடுபட்டு போன, முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர்கள், பனைமர தொழிலாளர்கள், கைத்தறி, காலணி தயாரிப்பு தொழிலாளர்கள், மண்பாண்ட கலைஞர்கள் உள்ளிட்டோரில், அவரவருக்கான நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும், தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சர்க்கரை ரேசன்கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வாய்ப்பு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments