கொரோனா பெரிய அளவில் பரவாமல் தடுக்க மத்திய அரசு வெளியிட்டுள்ள திட்டங்கள்

0 14916

கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவி விடாமல் தடுப்பதற்கு தீவிரமான திட்டங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று உள்ளவர்கள் இதுவரை 274 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு, மார்ச் 22ஆம் தேதிக்குப் பிறகு மும்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாதிப்பு பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய 20 பக்க ஆவணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சலோடு ஒப்பிடும்போது கொரோனா தொற்று அதிகம்பேரை பாதித்திருந்தாலும், பரவிய பகுதிகள் இரண்டிற்கும் ஒரேமாதிரியாக இருப்பதாகவும், எனவே கொரோனா நாடு முழுவதும் சீராகப் பரவ வாய்ப்பில்லை என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்பதையே இது காட்டுவதாகவும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த காப்பு மண்டலங்களை உருவாக்குவது, குறிப்பிட்ட பகுதிகளை ஒரு மாத காலத்திற்கு மூடி சீல்வைப்பது உள்ளிட்ட திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

1.மூடி சீல் வைக்கப்படும் பகுதிகளில் இருந்து யாரும் வெளியேறவோ உள்ளே செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

2.கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்படாது.

4.பொதுப்போக்குவரத்தும் இருக்காது. அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

5.தொடர்ந்து 4 வாரங்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தவில்லை எனில் மட்டுமே, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

6.கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, சந்தேகத்திற்கிடமானவர்கள் அனைவரும் தனிமை வார்டில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

7.லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் மைதானங்களிலும், மிதமான அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவமனைகளிலும், தீவிர அறிகுறிகள் இருப்பவர்கள் உயர்சிறப்பு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுவார்கள்.

8.பரிசோதனையில் இரண்டு முறை நெகடிவ் என வந்தவர்கள் மட்டுமே வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

9.மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் எப்போதும் மூன்றடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments