அமெரிக்காவில் கொரோனா தாக்கத்திற்கு ஒரேநாளில் 1000 பேருக்கு மேல் பலி

0 4681

கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். 

சீனாவின் வூகான் நகரில் விஷமாய் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று நோய்க்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரசின் மையப்புள்ளியாக மாறிப்போன அமெரிக்காவில் நோய்த் தொற்றால் நேற்று மட்டும் 30 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 8 ஆயிரத்து 206 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் ஆயிரத்து 37 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தேவையான முகக்கவசங்கள், கண்ணாடிகள், கையுறைகள் போன்றவற்றை சீனாவின் இ காமர்ஸ் நிறுவனமான அலிபாபா நிறுவனம் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது.

இந்த நிலைமையில் ப்ரூக்ளின் நகரில் உள்ள மருத்துவமனையில் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் பாதுகாப்பு உடை கிடைக்கப்பெறாமல் மழைக் கோட்டுக்களையும், நீளமான குப்பை பொறுக்கும் பைகளையும் ஆடைகளாக அணிந்து கொண்டு சிகிக்சை அளிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே மியாமி கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தி கேரால் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அந்தக் கப்பலுக்கு மருத்துவர் குழுவினர் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அதிபர் டிரம்ப், இந்த வாரத்திற்கும் அடுத்த வாரத்திற்கும் இடையில் மிகக் கடினமான நாட்களாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் துரதிர்ஷ்டவசமாக நிறைய மரணங்கள் இருக்கும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து கலிபோர்னியா மற்றும் லூசியானாவில் தலா 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விஸ்கான்சின் மற்றும் நெப்ராஸ்கா பகுதிகளை பேரழிவுப் பகுதிகளாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments