பிரதமரின் அழைப்பின் பேரில் இன்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் தீபத்திருவிழா..!

0 2981

பிரதமர் மோடி அறிவித்தபடி இன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு அனைவரும் மின் விளக்குகளை அணைத்து வீட்டு வாசலில் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றும் நிகழ்வுக்கு மத்திய அரசு சில வழிகாட்டல்களை அறிவித்துள்ளது.

கடந்த 3ம் தேதி வீடியோப்பதிவு ஒன்றை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 5ஆம் தேதியான இன்று இரவு 9 மணிக்கு கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவின் ஒற்றுமையை பிரகடனப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். யாரும் வீட்டில் தனியாக இல்லை என்பதை உணர்த்தும் வகையிலும் கொரோனா எனும் இருள் அரக்கனை விரட்டும் வகையிலும் வீடுகளின் மின் விளக்குகளை இரவு 9 மணிக்கு அணைத்துவிட வேண்டும்.

9 நிமிடங்களுக்கு வீட்டு வாசலில் வந்து அகல் விளக்குகள், தீபங்கள், மெழுகுவர்த்திகள், செல்போன் டார்ச்சுகள் போன்றவற்றால் ஒளியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். சமூக விலகலை கடைபிடித்து கூட்டம் சேர்க்காமல் தள்ளி நிற்குமாறும் வீட்டை விட்டு வீதிகளுக்கு வராமல் வீட்டு வாசலிலேயே அல்லது பால்கனியில் நிற்குமாறும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஒரே நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தினால் டிரான்ஸ்பர்களின் கிரிட்கள் நிலைகுலையும் என்றும் அதன் சமன் குறையும் என்று கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய மின்துறை அமைச்சகம் மின்சாரத்தை ஒரே நேரத்தில் அணைப்பதாலும் மீண்டும் ஒளிரச் செய்வதாலும் எந்தப் பிரச்சினையும் எழாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு சில வழிகாட்டல்களை வெளியிட்டு பொதுமக்கள் அவற்றை தவறாமல் கடைபிடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, தொலைக்காட்சிப் பெட்டி, பிரிட்ஜ், மின்விசிறி, ஏசி, கணினி உள்ளிட்டவற்றை அணைக்கத் தேவையில்லை. தெருவிளக்குகள் அணைக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனை, காவல்துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டடங்களில் மின்விளக்குகளை அணைக்கத் தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களின் பாதுகாப்புக்காக அனைத்து தெருவிளக்குகளும் எரிவதை உறுதி செய்யும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் அணைக்கப்பட்டு மீண்டும் ஒளியூட்டப்படும் நிகழ்வில் மின்வாரிய ஊழியர்கள் பணியில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளக்கு அல்லது தீபங்களை ஏற்றும் முன்பு சோப்பு போட்டு கைகழுவினால் போதும். சானிட்டைசர்கள் தீப்பிடிக்கும் தன்மையுடவை என்பதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் சமூக விலகலை தவறாமல் கடைபிடிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments