கொரோனா-தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

0 7343

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்ததால் தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

மதுரையை சேர்ந்த நபர், தமிழகத்தில் முதன் முதலாக கொரோனாவுக்கு பலியானார். இந்நிலையில் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய விழுப்புரம் சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்த 51 வயது நபர், கொரோனா உறுதியான நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை திடீரென மூச்சுத் திணறல் அதிகரித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திரும்பிய 21 பேருக்கு கொரோனா உறுதியாகி, தேனி அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகனிடம் இருந்து தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தேனி அரசு மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை தனிவார்டில் கடந்த 2ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது.

இதேபோல் கொரோனா பாதித்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணிக்கு மரணமடைந்தார். அவர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உயிரிழந்து கொரோனா உறுதியானவரையும், புதிதாக பலியானவரையும் சேர்த்து கணக்கிட்டால் தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments