இன்றைய டாஸ்க் குரங்கு... குரங்கு... மரத்தவிட்டு இறங்கு..! இது நம்ம ஊரு ஸ்டைல்

0 4038

ஊரடங்கை மீறி ஊருக்குள் சுற்றி வரும் சொல்பேச்சு கேளா மனிதர்களுக்கு பரிணாம வளர்ச்சியை நினைவூட்டும் வகையில் மரம் ஏறும் தண்டனை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் ஊர்சுற்றும் உள்ளூர் அதிபர்களுக்கு, கொரோனாவின் விபரீதத்தை உணரவைக்க சுட சுட டாஸ்க்குகளை தண்டனையாக வழங்கி சூதானமாக புத்தி சொல்லி வருகின்றனர் காவல் துறையினர்.

அந்த வகையில் டாஸ்குகளின் மாஸ்டர் வண்ணாரபேட்டை துணை ஆணையர் சுப்புலெட்சுமி, தன்னிடம் சிக்கியவர்களுக்கு வழக்கம் போல வாத்தியார் போல பஞ்சம் இல்லாமல் டாஸ்க்குகள் கொடுத்து வகுப்பு எடுத்தார்.

வீட்டில் அடங்காமல் சைக்கிளுடன் வலம் வந்த சாம்பியன்களை மடக்கி, அறிவுரை வழங்கியதோடு ஸ்டாண்ட் போட்ட நிலையில் சைக்கிளை ஓட்ட வைத்தார்.

காரணமின்றி வீதியில் வலம் வந்தவர்களை வரிசையாக நிற்கவைத்து திருக்குறளை திரும்ப திரும்ப சொல்ல வைத்தார்.

இன்னும் சிலருக்கு கணக்கீடு சொல்லும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

தலையில் பிளீச் செய்து கொண்டு கூட்டாளியுடன் சுற்றிய வயதான புள்ளீங்கோக்களை பிடித்து தங்கள் தவறை ஓப்புக் கொண்டு உறுதி மொழி எடுக்க செய்து வீட்டிற்கு திருப்பி அனுப்பினார்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ், விதிமீறும் வாகன ஓட்டிகளின் கன்னத்தில் கைவைக்காமல் கண்ணியமாக புத்தி சொல்லி வருகிறார்.

வீட்டை விட்டு இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றிய சொல்பேச்சு கேட்காத மகான்களுக்கு மனிதனின் பரிணாம வளர்ச்சியை நினைவூட்டும் வகையில் மரக்குரங்கு டாஸ்க் கொடுக்கப் பட்டது..!

ஒருவர் பின் ஒருவராக தங்கள் மூதாதையர்களின் பூர்வீக கலையை மறக்காமல் மரம் ஏறி டாஸ்க்கை நிறைவு செய்தனர்.

திருவள்ளூர் போலீசார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மார்க்கெட்டிற்கு வந்த இல்லத்தரசர்களை எச்சரித்தனர். வீணாக சுற்றியவர்களின் இருசக்கர வாகனங்களுக்கு பெயிண்டால் பச்சை குத்தி அவர்களுக்கு வாழைப்பழம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்றி , இப்படி பொறுப்பில்லாமல் வாகனத்தில் சுற்றினால் கிளைமேக்ஸில் மாலை போடும் நிலைமை தான் வரும் என்று சிலருக்கு மாலை அணிவித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கில்லி போல வாகனத்தில் சுற்றியவர்களை பிடித்து வித விதமான டாஸ்க்குகளை கொடுத்து அவர்களது ஊர் சுற்றும் எண்ணத்தை சல்லி சல்லியாக நொறுக்கி வீட்டுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர் தமிழக காவல்துறையினர்..!

அத்தியாவசிய தேவை, மருத்துவம் தவிர்த்து தேவை இன்றி வீணாக ஊர்சுற்றி உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதே காவல்துறையினர் வேண்டு கோளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments