ஊரடங்கு உத்தரவை, கடைபிடிக்கும் மக்களுக்கு பரிசு - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

0 1108

திண்டுக்கல்லில் சமூக விலகலை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பிரிட்ஜ், பீரோ, குக்கர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாநகராட்சி பூ மார்க்கெட் அருகே உள்ள அம்மா உணவகத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். உணவு தயாரிக்கப்படும் முறை வினியோகிக்கப்படும் முறை குறித்து ஆய்வு செய்த அவர் உணவினை சாப்பிட்டார்.

மேலும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சலுகை விலையில் 39 வகையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகத்தில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர் என்றும், பொதுமக்கள் வீட்டினை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

மேலும் பொதுமக்கள் வசதிக்காக அம்மா உணவகத்தில் மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சித்தலைவரின் ஏற்பாட்டின்படி, விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் அரிசி பருப்பு உள்ளிட்ட 39 வகையான உணவுப் பொருட்கள் 2000 ரூபாய்க்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சியின் சார்பில் 13 வகையான காய்கறிகள் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலமாக திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள், நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்களில் கொள்முதல் செய்யும் பொது மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பொதுமக்களுக்கு முதல் பரிசாக பிரிட்ஜ் இரண்டாம் பரிசாக இரண்டு பீரோக்கள், மூன்றாவது பரிசாக 3 குக்கர் நான்காவதாக 100 பேருக்கு சேலை வழங்கப்பட உள்ளது எனவும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments