செல்போனில் கேட்டதும் கிடைக்கும் பேருதவி..!

0 5920

கொரோனோ பேரிடரால் நேரடி பாதிப்புக்குள்ளாகி உள்ள மாற்றுதிறனாளிகள் மற்றும் தனியாக வசித்துவரும் முதியவர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள உதவி எண் சேவை பலரை காத்து வருகின்றது. செல்போனில் கேட்டதும் கிடைக்கும் பேருதவி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. 

கொரோனோ நோய் தொற்றால் உலகம் முழுவதுமே முடங்கி உள்ளது. பிறர் உதவியின்றி வாழ்ந்து வந்த சாமானிய மக்களே 21 நாட்கள் ஊரடங்கால் பொருளாதார தேவைக்காக அரசை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்பட கூடிய பாதிப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காக, இந்தியாவிலே முதன் முறையாக தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தின் மூலமாக, 18004250111, 9700799993 என்ற கட்டணமில்லா உதவி எண்களை சமூக நலத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 11 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில், கேட்கும் மற்றும் பேசும் திறன் குறைபாடு கொண்டவர்களால் சைகை மொழியாக மூலமாக மட்டுமே தங்கள் தேவைகளை வெளிப்படுத்த முடியும். ஆகையால் அவர்களுக்காக பிரத்யேகமாக வீடியோ கால் வசதிக் கொண்ட 9700799993 என்ற உதவி எண் தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து முடக்கத்தால் கவனிப்பாளர்கள் வரமுடியதாதால் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்களின் அன்றாட வாழ்க்கை முறை கடினமாகி உள்ளதாகவும், முதியவர்களுக்கான உணவு மற்றும் மருந்துகள் கூட கிடைப்பதில்லை எனவும் அதிக அழைப்புகள் வருவதாக குறிப்பிடும் ஊழியர்கள், அவர்களுக்கான உதவியை மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் மூலம் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மாற்று திறனாளிகள் மட்டுமின்றி பிறர் உதவி தேவைப்பட கூடிய முதியவர்களும் இந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு தேவைகளை தெரியப்படுத்தி வருகின்றனர். ஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் பாராட்டும் ஆதரவும் குவிந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments