பூ போட வேண்டாம் சாப்பாடாவது கொடுங்கள்..! தூய்மைபணியை போற்றுங்கள்

0 3929

பஞ்சாப்பில் கொரோனா வைரஸுக்கு அஞ்சாமல் பணிசெய்யும் துப்புரவுத் தொழிலாளர்களை மலர்தூவியும், பணமாலை அணிவித்தும் கவுரவிக்கும் நிலையில், சென்னையில் பெண் துப்புரவு பணியாளர்கள் பசியால் வாழைப்பழத்திற்கு கையேந்திய அவலம் அரங்கேறி இருக்கின்றது... 

கொரோனா அச்சத்தால் நாட்டு மக்கள், வீட்டுக்குள் முடக்கப்பட்டிருக்க, பணி செய்து கிடப்பதே எங்கள் தலையாய பணி என்பது போல பஞ்சாப் மாநிலத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக பூக்களை தூவியும், பண மாலை அணிவித்தும் ஊக்கப்படுத்தியதோடு, மாடியில் நின்று கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.

அதே நேரத்தில் 2015 வெள்ளப்பாதிப்பு தொடங்கி, வர்தா புயலாக இருந்தாலும் சரி, ஓங்கி அடித்த ஒக்கி புயலாக இருந்தாலும் சரி, நம்மை எல்லாம் கதற விட்ட கஜா புலாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பு இல்லையென்றால் அவற்றில் ஏற்பட்ட குப்பையை நம்மால் அகற்ற முடிந்திருக்காது என்பது மறுக்க இயலாத உண்மை..!

அந்த அளவிற்கு சொற்ப சம்பளத்தில் தங்கள் உடல் நலம் மறந்து உண்மையாக உழைக்கின்ற அந்த மக்களை சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் ராம்கி என்பவர் கையேந்த விட்டிருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து இல்லாத நிலையில் குப்பை வண்டிபோல சிறு வாகனத்தில் நெருக்கியடித்து ஏற்றிவரப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவோ தண்ணீரோ வழங்குவதில்லை என்று கூறப்படுகின்றது. ஒரு சில நல்ல உள்ளங்கள் கொடுத்து வந்த சாப்பாட்டையும் தடுத்து விட்டதால் அம்மக்கள் வேகாத வெயிலில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது சாப்பிட ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனாவை காரணம் காட்டி எவரும் இவர்களுக்கு உணவளிக்க முன்வராத நிலையில், சிலர் தங்களை வள்ளல் போல காட்டிக் கொள்வதற்காக பெயருக்கு சில வாழைப்பழங்களையும் பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் கொடுப்பது போல கொடுத்து அதனை வீடியோ எடுத்துக் செல்கின்றனர்.

கொளுத்தும் வெயிலிலும் தூய்மை பணியில் ஈடுபட்டு களைத்த அந்த தூய்மை பணியாளர்கள் ஒற்றை வாழைப்பழத்துக்காக போட்டி போட்டுக் கொண்டு கையேந்தி நிற்கும் காட்சி நெஞ்சை பதற வைக்கின்றது.

முககவசம் தொடங்கி கையுறை என எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து தூய்மைப் பணி செய்யும் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் தேவையான உதவிகளை வழங்க சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்..!

கொரோனா பாதிப்புக்குள்ளாகி தூய்மைப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் மருத்துவர் மற்றும் செவிலியர் போல தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நம் மண்ணில் மனிதம் காப்போம், அனைவரிடமும் மனிதநேயம் போற்றுவோம்..! 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments