சைடு பூட்டு போட்டு எட்டு போட்ட தம்பி..! சுண்டலாக தண்டால்ஸ்

0 5786

தமிழகத்தில் ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் ஊர் சுற்றும் தம்பிகளை, பூட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் எட்டுப்போட சொல்லி தெறிக்கவிட்டுள்ளார் பெண் காவல் அதிகாரி ஒருவர்... தந்தையின் கரங்களால் போலீசின் பிரம்படி பெற்ற தனயன்களின் தண்டனை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்படாமல் வெட்டுபுலிபோல மொட்ட வெயிலில் ஊர் சுற்றிவருகின்றனர்.

போலீசிடம் சிக்கிக்கொள்ளும் இந்த குட்டிப்புலிகளுக்கு தமிழக காவல்துறையினர் சுண்டல் போல தண்டால் தண்டனைகளை அள்ளிக்கொடுத்து வருகின்றனர்.

தண்டால் தண்டனையை தொடர்ந்து தின்ன சாதம் ஜீரணம் ஆவதற்கு கையை தூக்கி எழுந்து அமரவைக்கும் மூட்டு வைத்தியம் செய்யப்பட்டது.

அரியலூர் கடைவீதியில் வீணாகசுற்றிய வாகன் ஓட்டிகளை பிடித்து செருப்பை கழற்றிவிட்டு, கொளுத்தும் வெயிலில் ஒற்றைக்காலில் நிற்கவைத்து லுங்கி டான்ஸ் கற்றுக் கொடுக்கப்பட்டது.

காதலியுடன் பைக்கில் சுற்றியவர்களையும், காதலியே கிடைக்காமல் வீதியில் வீணாக சுற்றியவர்களையும், உச்சி வெயிலில் நிற்க வைத்து சிறப்பாக செஞ்சி விட்டது நம்ம செஞ்சி போக்குவரத்து போலீஸ்.

வாகன ஓட்டிகள் கொடுத்த வரைக்கும் போதுமென்பது போல பார்க்க , வள்ளல் போல கையை நீட்டி உயர்த்தி குதிக்க வைத்து, அவார்டுகள் போல தங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி வைத்தனர் செஞ்சி போலீசார்..!

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த ஊதாரி நண்பர்கள் சிலர் போலீசுக்கு கட்டுப்பட மறுக்க ஒருவருக்கு பிரம்பு வைத்தியம் செய்த வுடன் அனைவரும் அடக்கமாக தோப்புகரணம், போட்டனர்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக சென்னை வண்ணாரப்பேடையில் டியூக்கில் சுற்றிய அரைடவுசர் தம்பியை மடக்கிய காவல் துணை ஆணையர் சுப்புலெட்சுமி, புள்ளீங்கோஸ் வாகனமான டியூக்கிற்கு சைடு பூட்டை போட்டு விட்டு, அதனை உருட்டியே 8 போட வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கினார்.

கரடிபோன்ற தனது வண்டியுடன் நீண்ட நேரம் மல்லுக்கட்டிய அந்த தம்பிக்கு எட்டும் போட முடியவில்லை, எட்டுவைக்கவும் முடியவில்லை..! அடுத்ததாக சப்ஸ்டியூட் ஆட்டகாரர் களமிறங்கி வண்டியை வளைத்து பார்த்தார். வண்டியின் டயர் தேய்ந்து போனது தான் மிச்சம் 8 போட முடியாததால் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

ஊரடங்கை மீறி சுற்றிய இரு இளைஞர்களை பிடித்த ஓட்டபிடாரம் காவல்துறையினர், பிரம்பை அவர்களது தந்தையர்களின் கையில் கொடுத்து தோழுக்கு மேல் வளர்ந்த அந்த உதாரிக்குழந்தைகளை தட்டிக் கொடுக்க வைத்த வைபவம் அரங்கேறியது.

ஊருக்குள் கும்பலாக சுற்றி திரிந்த நண்பர்களை சிங்கிலாக மடக்கிய காவல் அதிகாரி ஒருவர் அவர்களுக்கு 100 தோப்பு காரணங்களை பரிசாக கொடுத்தார்

கடை நிலை காவலர் முதல் உயர் காவல் அதிகாரிகள் வரை கொரோனா பரவுதலை தடுக்க கண்ணியத்துடனும், கடமை உணர்வுடனும் சமூக அக்கறையுடனும் இரவுபகல் பாராமல் தூக்கம் மறந்து காவல் பணியில் இருக்கும் சூழலில், மதுரை பொருசுபட்டியில் சமூக அக்கறை துளியும் இல்லாத ஏட்டையா ஒருவர் சட்டவிரோதமாக திறந்து வைத்திருந்த மதுக்கடைக்குள் புகுந்து, சில பல மதுபாட்டிகளை வாங்கி சட்டைக்குள்ளும் பேண்டுக்குள்ளும் போட்டுக் கொண்டு மிடுக்காக வெளியேறினார்

பொதுமக்கள் போலவே ஊரடங்கை மீறும் காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments