கொரோனா தாக்கத்தை உணராமல் சிலர் வெளியே சுற்றுகின்றனர் - முதலமைச்சர்

0 2309

கொரோனா தாக்கத்தை உணராமல் சிலர் வெளியே சுற்றுவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும், அம்மா உணவகங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு விற்பனை செய்யப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் தானும் அங்கு உணவருந்தியதோடு, அங்கிருந்த பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்யவும், உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்கவும் ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், நலிவுற்ற மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா உணவக திட்டம் மூலம், நாளொன்றுக்கு நான்கரை லட்சம் பேர் உணவருந்துகின்றனர் என்றார்.

மேலும் டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள் நோயின் தாக்கத்தை உணர்ந்து தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர், ஈஷா சிவராத்திரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஒவ்வொரு உயிரும் முக்கியம். ஒருவர் கூட பாதித்துவிடக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என குறிப்பிட்ட முதலமைச்சர், மருத்துவமனையில் துடித்து கொண்டிருப்பதை பார்த்த பிறகும் 144 தடை உத்தரவை சிலர் அலட்சியம் செய்கிறார்கள் என தெரிவித்தார். ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments