இந்தியாவில் கொரோனாவுக்கு 38 பேர் பலி

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று நோய்க்கு மேலும் 3 பேர் பலியானதையடுத்து, இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் (palghar) மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் தேதி அனுமதிக்கப்பட்ட 50 வயது நபருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் மகாராஷ்டிரத்தில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன்மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் நாடு முழுவதும் கொரோனாவுக்கு மரணமடைந்தோரின் எண்ணிக்கையும் 38-ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 320-ஆக அதிகரித்துள்ளது. இதையும் சேர்த்து நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 415ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 320 பேரும், கேரளாவில் 234 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 101 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து அதிகபட்சமாக டெல்லியில் 97 பேரும், குஜராத்தில் 73 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர்த்து, நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு கொரோனாவில் இருந்து 124 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39 பேரும், ஹரியானாவில் 21 பேரும், கேரளாவில் 19 பேரும் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் கூறுகின்றன
Comments