கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு- ஊரடங்கை மீறியதே காரணமா?

0 2864

21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவசியமில்லாமல் பொதுமக்கள் சாலைகளில் நடமாடுவதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கை அறிவித்த போது, "உங்கள் வீட்டு வாசலில் லட்சுமணக் கோடு கிழிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி ஒரு அடி கூட எடுத்து வைக்காதீர்கள்" என்று கேட்டுக் கொண்டார். வீட்டில் இருப்பதே முழுமையான பாதுகாப்பு என்று மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல், தேவையின்றி பலரும் வீதிகளில் நடமாடத் தொடங்கி விட்டனர். மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் போன்றவற்றை காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறக்க அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சாலைகளில் போலீசார் அனாவசியமாக சுற்றுபவர்களை அடையாளம் கண்டு அபராதம், வாகனங்கள் பறிமுதல், தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மக்களின் முழுமையான ஆதரவு குறைவதாக உள்துறை அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. காணொலி மூலம் நிலைமையை ஆய்வு செய்து பல்வேறு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை செயலாளர் அகர்வால், இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து 1600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் மக்களின் ஆதரவு குறைவதால்தான் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் 146 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஹாட்ஸ்பாட் எனப்படும் கொரோனா பரப்பும் மையப்புள்ளிகளையும் நபர்களையும் கண்டறியவும் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

21 நாள் ஊரடங்கில் ஒருவாரம் முடிந்துவிட்ட நிலையில் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இந்த இரண்டு வாரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படியும் மத்திய அரசு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments