ஈரோட்டில் கொரோனா பாதிப்பு - அதிகரிக்கும் எண்ணிக்கை - அச்சத்தில் மக்கள் !

0 4697

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இதுவரை 67 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அதில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் 24 பேருடன் முதலிடத்தில் உள்ளது. இதனால் அங்கு மேற்கொண்டு நோய்ப்பரவல் அதிகரிக்காமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகின்றன. பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனை உள்பட மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 363 படுக்கைகள் அதற்கென தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் கொரோனா அறிகுறிகளுடன் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசித்த பகுதிகளில் 16 ஆயிரத்து 456 குடும்பங்களைச் சேர்ந்த 57 ஆயிரத்து 734 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய் அறிகுறிகளுடன் 100- க்கும் மேற்பட்டோர் பெருந்துறை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவர் உள்பட மாவட்டத்தில் இதுவரை 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கி இருந்த கொல்லம்பாளையம் பகுதி ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் சென்று வந்த சுல்தான்பேட்டை மஜீத் மற்றும் அதனை சுற்றியுள்ள கொங்காலம்மன் கோவிலின் 5 வீதிகளில் உள்ள கடைகள் வணிக நிறுவனங்கள் அடைக்கபட்டு தினசரி கிருமி நாசினி தெளிக்கபட்டு வருகிறது.

அதேபோல் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் தங்கியிருந்த மரப்பாலம், மோசிக்கினார் வீதி, ஸ்டேட் பேங் சாலை, பெரிய அக்ரஹாரம் பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சுமார் 3700 குடும்பத்தினருக்கு கைகளில் சீல் வைக்கபட்டு வீதிகளிலும் வீடுகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் நேரில் சென்று நோய் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நோய்ப்பரவலை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு பிரயத்தனங்களை எடுத்து வரும் நிலையில், அதன் முக்கியத்துவத்தை உணராமல் பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக்கவசங்கள் அணியாமலும் சுற்றி வருவதைப் பார்க்க முடிகிறது.

அதிலும் சின்னஞ்சிறு குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி வெளியில் சுற்றுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. கொரோனா வைரசானது சமூகத் தொற்றாக மாறுவதற்கான முதற்கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கூறும் நிலையில், பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே நோய்ப்பரவலை கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments