டெல்லி நிசாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற 300 பேருக்கு கொரோனா அறிகுறி... 7 பேர் பலி

0 5284

டெல்லி நிசாமுதீன் மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 7 பேர் கொரோனா பாதிப்பில் பலியாகியுள்ள நிலையில், 300 பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 300 வெளிநாட்டவர்களையும், இந்தோனேசியாவை சேர்ந்த 800 மத பிரசாரகர்களையும் மத்திய அரசு கறுப்பு பட்டியலில் சேர்க்க உள்ளது. 

டெல்லி நிசாமுதீன் பகுதியில், இஸ்லாமிய சொற்பொழிவுகள் இடம்பெறும் தப்லிக் ஜமாத் மாநாடு மார்ச் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து சுமார் ஆயிரத்து 500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதேபோல, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்தும் சுமார் 8 ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இதில் பலருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதோடு, தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானாவில் 6 பேர், ஜம்மு-காஷ்மீரில் ஒருவர் என இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநாடு நடைபெற்ற டெல்லி நிசாமுதீன் மையத்தில் இருந்து 300 பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டனர். மேலும் அங்கு தங்கியிருந்த 700 பேர் பல்வேறு பகுதிகளில் தனிமை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிசாமுதீன் மையமும் மூடி சீல்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலா விசாவில் வந்து, அதற்கான விதிகளை மீறி மத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 300 வெளிநாட்டவர்களை கறுப்பு பட்டியலில் மத்திய அரசு சேர்க்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல, இந்தோனேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து, நிசாமுதீன் மத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 800 தப்லிக் பிரச்சாரகர்களையும் கறுப்பு பட்டியலில் மத்திய அரசு சேர்க்க உள்ளது. கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவுக்குள் நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments