“பேராசை பேரிழப்பை தரும்” - ஆன்லைன் பொறியில் சிக்கும் எலிகள் !

0 6917

அந்நிய நிறுவனத்தில் முதலீடு செய்து பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என பலரிடம் பண மோசடி செய்த ஈரோட்டைச் சேர்ந்த பட்டதாரிகள் இருவரை ராமநாதபுரம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

எப்படியாவது சீக்கிரம் பணக்காரனாக வேண்டும் என குறுக்கு வழிகளை யோசிப்போரை குறிவைத்து நடக்கும் மோசடிகளில் ஒன்றாக இந்த மோசடி அரங்கேறியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த காவலரான சுரேஷ் மற்றும் அவரது நண்பர் அருள்ராஜன் ஆகியோர் மாவட்ட காவல்துறையின் புகார் எண்ணுக்கு அழைத்து, சர்வதேச கும்பல் ஒன்று மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டி வருவதாக புகாரளித்துள்ளனர். விசாரணையில் புகாரளித்த இருவருமே மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.வாழ்க்கையில் சீக்கிரம் பணக்காரனாகி செட்டிலாக வேண்டும் என எண்ணிய சுரேஷும் அருள்ராஜனும் அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என இணையத்தில் தேடி இருக்கின்றனர்.

இவர்களைப் போன்ற எலிகளுக்கு என்றே பொறிகளை வைத்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இணைய மோசடி கும்பலில் ஒன்று, இருவரது செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டுள்ளது. ஆண்டர்சன் என்ற பெயரில் ஸ்கைப் செயலி மூலம் பேசியவன், தங்களது www.tradize.com மற்றும் www.topicmarkets.com ஆகிய டிரேடிங் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் குறைந்த நாளில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டியுள்ளான்.

அதற்காக தங்கள் நிறுவனத்தின் கிளை முகவர்கள் என்ற பெயரில் ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரை அறிமுகம் செய்திருக்கிறான் ஆண்டர்சன். அதன் பின்னர் சுரேஷையும் அருள்ராஜையும் தொடர்புகொண்ட பிரவீன்குமார், விஸ்வநாதன் ஆகியோர் இருவரிடமிருந்தும் தலா ஒரு லட்ச ரூபாயைப் முதலீடாகப் பெற்றுக்கொண்டு அதற்கு வட்டி என்று கூறி 15 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெற்ற சுரேஷும் அருள்ராஜும், தங்களது நண்பர்கள், உறவினர்கள் என பலரையும் இந்த ஆன்லைன் டிரேடிங்கில் இழுத்துவிட்டுள்ளனர். சில தினங்கள் கழித்து, மோசடி கும்பல் தரவிறக்கம் செய்யச் சொன்ன அப்பிலிக்கேஷன் ஒன்றை தங்களது லேப்டாப்பில் சுரேஷும் அருள்ராஜும் தரவிறக்கம் செய்துள்ளனர். அடுத்த நொடி, அவர்களது வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, சுரேஷின் கணக்கிலிருந்த 50 லட்ச ரூபாயும் அருள்ராஜின் கணக்கிலிருந்து ஏழரை லட்ச ரூபாயும் சுரண்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த தகவல்களைப் பெற்ற மாவட்ட காவல்துறை விரைவாக செயல்பட்டு, ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன்குமாரையும், விஸ்வநாதனையும் கைது செய்தது. அவர்களிடமிருந்து 9 லட்சத்து 70,ஆயிரம் ரூபாய் பணம், 25 டெபிட் கிரிடிட் கார்டுகள், 9 லாப்டாப்கள், 7 செல்போன்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இதே பாணியில் இருவரும் ஏராளமானோரை ஏமாற்றி பல கோடி ரூபாயை மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

சட்டம் போட்டு தடுக்கும் கூட்டம் எவ்வளவுதான் முயன்று குற்றங்களைத் தடுக்க முயன்றாலும் திட்டம் போட்டு திருடும் கூட்டத்திடம் சிக்கும் பேராசைக்காரர்களால் மோசடிகள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments