ஊரடங்கில் உறங்காத விழிகள்...காவல் துறையின் களப்பணி..!

0 16792

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையின் பணி முக்கியமானது.

ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய சாலைகளில் காவல் காக்கும் பணியோடு, விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபடும் தமிழக காவல்துறை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகத்தில் ஒவ்வொரு பேரிடர் காலங்களின் போதும் காவல்துறையின் பங்களிப்பு, "காவல் துறை உங்கள் நண்பன்" என்பதற்கு அர்த்தம் சேர்க்கும் அளவிற்கு இருக்கும். ஊரடங்கில் ஊரே அடங்கிவிட உணவு அளிக்க ஆள் இல்லாத சாலையில், காக்கைக் கூட்டத்திற்கும், நாய்களுக்கும் தினமும் உணவு அளித்து வருகின்றனர் போக்குவரத்து போலீசாரான சேகரும், வெங்கடேசனும்.

கொரோனா அச்சத்தில் தமிழ்நாடே ஊரடங்கு உத்தரவில் முடங்கிவிட, களத்தில் இறங்கி காவல் காக்கும் பணிகளை மட்டுமே இல்லாமல் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவுக்கு அடங்காத நபர்களை, மற்ற மாநில போலீசார் லத்தியால் முட்டியை பெயர்க்க, நம்ம ஊர் போலீஸோ கையெடுத்து வணங்கி "உங்கள் காலில் விழுகிறேன், விளைவுகள் அறியாமல் வெளியில் வராதீர்கள்" என்று உருக, மனம் திருந்திய வாகன ஓட்டிகள் சிலர் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுச் சென்றனர்.

"கொரோனாவால் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி, வெளியில் வரும் பொதுமக்களை தாக்காதீர்கள் லத்திக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, புத்தி சொல்லி புரிய வையுங்கள்" என்ற சென்னை காவல்துறை அதிகாரி ஒருவரின் பேச்சு, வாட்ஸ் அப்பில் வைரல் ஆச்சு.அதே வேளையில் காவல் துறையின் அறிவுறுத்தலை கேட்காத நபர்களுக்கு வேறு மொழியில் பாடம் சொல்லவும் தயங்கவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு துறையினர் ஈடுபட்டிருந்தாலும், காவல்துறையினர் தான் பொதுமக்களை களத்தில் நேரடியாக சந்திக்கின்றனர். எல்லோரையும் போல் தான் காவல் துறையினருக்கும் குடும்பமும், குழந்தைகளும் உள்ளனர். வாகன சோதனையின் போது வருகிற வாகன ஓட்டிகளில் யாருக்காவது வைரஸ் தொற்று இருந்தால் என்னாவது என்று அச்சப்படாமல், உச்சி வெயில், ஊரடங்கிய இரவு என நேரம் பார்க்காமல் ஆண், பெண் என பேதம் பார்க்காமல் அனைவரும் பணியில் இருக்கின்றனர்.

ஒருபுறம் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை மருத்துவர்கள் காக்க, மறுபுறம் வெளியில் வருபவர்களை தடுத்து கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க காவல்துறை காக்கிறது என்பதே நிதர்சனம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments