கொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...!

0 8382

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார்.

அதே சமயம்  கொரோனாவுக்கு எதிரான போராட்டம் வாழ்வா சாவா என்ற பிரச்சனையாக மாறி உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். தமது மாதாந்திர வானொலி உரையான மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது கொரோனா தொற்று மற்றும் அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றான 21 நாள் ஊரடங்கைப் பற்றி அவர் குறிப்பிட்டார். ஊரடங்கால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும்  மக்கள் தம்மை மன்னிப்பார்கள் என தமது மனசாட்சி கூறுவதாக மோடி நெகிழ்ந்துள்ளார்.

அதே சமயம் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு, தம்மை பிரதமர் இந்த நெருக்கடிக்கு ஆளாக்கி விட்டாரே என்ற எண்ணம் தோன்றலாம் என கருதுவதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஊரடங்கு உங்களையும்,உங்களது குடும்பத்தினரையும் காப்பாற்றும் முயற்சி என்று விளக்கம் அளித்துள்ள அவர், மேலும் பல நாட்களுக்கு இது போன்ற பொறுமையை காக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் வாழ்வா சாவா பிரச்சனை என வர்ணித்த மோடி, அதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதுடன் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஊரடங்கு காலகட்டத்தில் பழையகால பொழுதுபோக்குகளான வீட்டுத் தோட்டம், பாட்டு கேட்பது உள்ளிட்டவற்றில் நேரத்தை செலவிட்டு அதை பயனுள்ளதாக மாற்றுமாறு மக்களுக்கு மோடி வேண்டுகொள் விடுத்துள்ளார்.சமூக விலகியிருத்தல் என்பது உற்றார் உறவினரை விட்டு விலகிச் செல்வது அல்ல என்ற மோடி, அவர்களுடனான உணர்வுகளை புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். மனித சமூகத்தை பலிகடாவாக மாற்றியுள்ள கொரோனாவை ஒழித்துக் கட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மோடி, ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவியாக இருக்கும் வங்கிப் பணியாளர்கள், ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள், மளிகைக்கடைக் காரர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments