பப்ஜி பாய்ஸ்களுக்கு பலே பனிஷ்மெண்ட்.!

0 9519

ஊரடங்கை மீறி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அடுத்த எப்போதும் வென்றான் கிராமத்தில்   கும்பலாக அமர்ந்து பப்ஜி விளையாடிய கிராமத்து பாய்சை பிடித்த போலீசார், அவர்களை பள்ளிக்கூட வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்யவைத்தனர்.

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதால் விழுப்புரம் மாவட்டத்தில் 289 வழக்குகள் பதிந்து 269 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாத மாவட்டம் என்று பெயரெடுத்துள்ள, தூத்துக்குடியில் தோப்பு கரணம், பெற்றோரால் புத்தி சொல்லுதல் உள்ளிட்ட வினோத தண்டனைகள் மூலம் எல்லை மீறும் இளசுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனா குறித்த எந்த விழிப்புணர்வும் இன்றி, எப்போதும் வென்றான் கிராமத்தில் கும்பலாக அமர்ந்து கேரம் மற்றும் செல்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை சுற்றி வளைத்த போலீசார் வீடியோ கேமில் வருவதை போல இரு லெவல் தண்டனைகளை வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முதல் லெவலில் வரிசையாக நின்று 100 தோப்பு கரணம் போட வைத்தனர்.

இளைஞர்கள், 2 வது லெவலில் அங்குள்ள பள்ளிக்கூட வளாகத்தை விளக்குமாறு கொண்டு பெருக்கி கூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இளைஞர்களுக்கு போட்டியாக, தெருவில் கும்பலாக அமர்ந்து சீட்டுக் கட்டுகளுடன் சூதாடிய அரைக்கால் சட்டை அணிந்த அணில்கள் அப்படியே சிக்கிக் கொண்டது.

சிக்கிய சிறுவர்களை கொத்தாக காவல் நிலையம் கூட்டிச்சென்ற காவல் துறையினர், அவர்களின் கைகளை டெட்டால் கொண்டு கழுவசெய்து, பெற்றோரை வரவழைத்து புத்தி சொல்லி அழைத்து செல்லும் தண்டனை வழங்கினர்.

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தவும்,ஊரடங்கை அமல்படுத்தவும் போலீசார் எடுத்து வரும் இது போன்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

பெற்றோரின் விழிப்புணர்வே பிள்ளைகள் வீதிக்கு வருவதை தடுக்கும்..! என்று எச்சரிக்கின்றனர் போலீசார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments