தரமான போலீசும் தள்ளாடும் போலீசும்..! இது தான் உங்க டக்கா..?

0 18977

தமிழகத்தில் கொரோனா பரவுதலை தடுக்க போலீசார் தொடர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் புதுச்சேரி காவல்துறையினரோ ஊருக்குள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகளையும், மதுவாங்க முண்டியடிக்கும் கூட்டத்தையும் கண்டு கொள்ளாமல், காட்டுக்குள் சென்று கள்ளசாராய வியாபரிகளை விரட்டி வருகின்றனர்.

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்றால் வீதியில் சுற்றாமல் இருக்க முடியாது என்று கால்களை கிளப்பிக் கொண்டு கடைவீதிக்கு வந்தவர்களை, கொத்தாக பிடித்து 2 மீட்டர் இடைவெளிவிட்டு நிற்கவைத்து தோப்புக்கரணம் போடச்செய்த திருவண்ணாமலை போலீசார் அவர்களுக்கு லத்தியால் சுட சுட சுண்டலும் வழங்கினர்

நம்ம தலைநகர் காவல்துறை மட்டும் என்ன தக்காளி தொக்கா? ஊரடங்கை மதிக்காமல் டியூக்கில் டிரிபிள்ஸ் ஆட்டம் காட்டிய 3 புள்ளீங்கோக்களை விரட்டி பிடித்து முட்டுச்சந்தில் வைத்து மொத்தி எடுத்து விட்டனர்..! 

அடிகொடுத்தவர்கள் மப்டியில் கலர் சட்டை அணிந்து முகத்தையும் தலையையும் மூடிக் கொண்டு வாட்ட சாட்டமாக வலம் வந்ததால் போலீசாரா ? இல்லை லோக்கல் ரவுடிகளா ? என்று தெரியாமல் 3 புள்ளீங்கோஸும் குழப்பத்துடனே ஓடியது தான் யாரும் எதிர்பார்காத டுவிஸ்ட்..!

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினரோ, வீடுதாண்டிய காளையர்களை பிடித்து கொரோனா தடுப்பு தேர்வு வைத்து மார்க் போட்டு அனுப்பி வைத்தனர். மொத்தம் 10 கேள்விகள் கொரானா வைரஸ் முதலில் பரவிய நாடு தொடங்கி கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன ? எதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ? சமூக விலகல் என்றால் என்ன ? என்று நீளும் கேள்விகளில் கொரோனாவின் காதலி யார் என்ற கேள்விதான் ஹை லைட்..!

படிக்கிற காலத்திலேயே தேர்வுன்னா பயம், அப்படியிருக்க அனாவசியத்துக்காக ஊர் சுற்றி தேர்வு எழுதனும்னா கஷ்டம் தானே ? என்று பலருக்கு பதில் தெரியாமல் கைகள் தந்தியடிக்க, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்

கொரோனா பரவலை தடுக்க இப்படி தரமான சம்பவங்களை தமிழக போலீசார் செய்து கொண்டிருக்க புதுசேரியில் மகாத்மாகாந்திவீதியில் திறந்து வைக்கப்பட்டிருந்த மதுக்கடை ஒன்றில் மது பாட்டில்களை வாங்க குடிகாரமகன்கள் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டிய புதுச்சேரி காவல்துறையினர் ஒருவரை கூட அங்கு பார்க்க இயலவில்லை, அதே நேரத்தில் ஆள் அரவமற்ற கரையாம்புத்தூர் காட்டுப்பகுதியில் பொலிரோ ஜீப்பில் சென்று கள்ளசாராயம் விற்ற இருவரை விரட்டிக் கொண்டு இருந்தனர்.

சுமார் அரைமணி நேரம் நடந்த கண்ணாம் மூச்சி விளையாட்டின் இறுதியில் இரு கள்ளசாராய வியாபாரியையும் அவரிடம் இருந்து 23 சாராய பாட்டில்களையும் , 6 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

ஊருக்குள் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பதை விட்டு, சிங்கம் சூர்யா போல கள்ளச்சாராய வேட்டைக்கு புறப்பட்ட புதுச்சேரி போலீசாரின் செயல்பாடு, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தள்ளாட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும் ஊருக்குள் மதுக்கடைகளை திறந்து வைத்து கூட்டம் கூட அனுமதித்திருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய சூழலில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த தமிழக போலீஸ் மேற்கொள்ளும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும் அடிப்பதற்கு முன்பு அவர்கள் வெளியே வந்தது அத்தியாவசியமா? அல்லது அனாவசியமா? என்பதை விசாரித்து விட்டு விளாசினால் விவகாரமாகாது என்பதை போலீசார் உணரவேண்டும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments