கொரோனாவால் நிலைகுலையும் பொருளாதாரம்..!

0 1839

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இது மக்களை பாதித்து அவர்களில் பலரை பலிவாங்கும் நிலை ஒரு புறம் இருக்க, கொரோனாவால் ஏற்படும் பொருளாதார சீரழிவு நமது கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக இருக்கும் என துறை சார்ந்த நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கொரோனாவால் நாடு முழுதும் முடக்கப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையையும் வருமானத்தையும் இழந்து, சொந்த கிராமங்களை நோக்கிச் சென்று விட்டனர். அத்துடன் நாடும் முடக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய துறைகளில் ஏற்பட்டும் வேலை இழப்பு மற்றும் பொருளாதார இழப்பு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஹோட்டல், சுற்றுலாத் துறையில் சுமார் 4 கோடி பேர் பணியாற்றுகின்றனர். கொரோனாவால் இன்னும் 12 மாதங்களில் இவர்களில் சுமார் 12 லட்சம் பேருக்கு வேலை பறி போவதுடன் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. 2.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானப் போக்குவரத்து துறையில் 3.5 லட்சம் பணியாளர்களுக்கு அடுத்த 2- அல்லது 3 மாதங்களில்வேலை போகும்.

இந்த துறையில் இரண்டு மாதங்களில் மட்டும் ஏற்படும் வருவாய் இழப்பு 4200 கோடியாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. 59 லட்சம் கோடி ரூபாய் புழங்கும் சில்லறை வர்த்தக துறையில் 4.6. கோடி பணியாளர்கள் இருக்கின்றனர். கடந்த 2 மாதங்களாக அவர்களில் ஏற்கனவே 1.1 கோடி பேர் வேலையை இழந்து விட்டதாகவும் 73 லட்சம் பணியாளர்கள் பணியாற்றும் உணவு விடுதிகளில் 14 லட்சம் பேருக்கு வேலை போகும் என்றும் ரியல் எஸ்டேட் ஏற்கனவே தள்ளாட்டத்தில் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

அங்கு 35 சதவிகித வேலை இழப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.  ஓலா, ஊபர் போன்ற கால் டாக்சி சேவைகளில் 50 லட்சம் டிரைவர்கள் இணைந்துள்ளனர். . நாடு முடக்கப்பட்ட பிறகு இவர்களில் பாதி பேருக்கு வேலையே இல்லை என்றும் பெரிய கார் நிறுவனங்களான மாருதி, ஹூண்டாய், ஹோண்டா மறு அறிவிப்பு வரும் வரை உற்பத்தியை நிறுத்தியுள்ளதால் அந்த துறையிலும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த பொருளாதார சீரழிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல்கட்டமாக வங்கிகளில் ஏழைகளுக்காக திறக்கப்பட்ட 38 கோடி ஜன்தன் அக்கவுண்டுகளில் தலா 5000 ரூபாயை போட்டால் அந்த மக்களுக்கு ஒரளவு ஆறுதல் கிடைக்கும். சிறு குறு நடுத்தர தொழில் துறையினருக்கு வங்கிக் கடன் வட்டியை குறைக்கலாம் அல்லது வட்டியே இல்லாமல் செய்யலாம்.

ஹவுசிங் மற்றும் பிசினஸ் லோன்களுக்கு 6 மாதம் இ.எம்.ஐ. யை நிறுத்தி வைக்கலாம். கச்சா எண்ணெய் பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments