சந்தைகளில் நீண்ட கியூ இடைவெளிவிட்டு மக்கள்

0 1251

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் அத்தியாவசிய பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அச்சம் காரணமாக மக்கள் காய்கறி சந்தையில் மொத்தமாக கூடியதுடன் பொருட்களை வாங்கிக்குவிந்தனர். இதனால் கவலையடைந்த சுகாதாரத்துறையினரும், காவல்துறையினரும், அத்தியாவசியப்பொருள்கள் தினமும் தடையின்றி கிடைக்கும் என்று ஒலிபெருக்கியில் அறிவித்ததுடன், மக்கள் கூடாதவாறு தடுப்பு வேலி அமைத்து வரிசையில் நிற்கவைத்தும், இடைவெளி விட்டு கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

தூத்துக்குடி காமராஜ் சந்தையில் தடுப்பு கட்டைகள் அமைத்து வரிசையாக நிற்க வைத்து 50 பேர்களாக சந்தைக்குள் அனுப்பிவைத்தனர். அவர்கள் காய்கறி வாங்கிவிட்டு வெளியே வந்தபிறகு அடுத்தடுத்து 50 பேராக அனுப்பப்பட்டனர். கடைகளும் இடைவெளி விட்டு வைக்கப்பட்டிருந்ததால் நெரிசல் இல்லாமல் மக்கள் காய்கறி வாங்கிச்சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தையில்  பொதுமக்கள் இடைவெளிவிட்டு நிற்கும் வகையில் கட்டங்கள் வரைந்து வைத்திருந்தனர். மேலும் சந்தைக்கு வந்த  வியாபாரிகளும், பொதுமக்களும் சோப்பு மற்றும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தனர்.

கரூரில் காமராஜ் மார்கெட், உழவர் சந்தை முன்பகுதி, வெங்கமேடு காய்கறி சந்தை ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு 3 அடி இடைவெளியில் நிற்க கோடு போட்டும் அவற்றை பின்பற்றாமல் கூட்டமாக நின்று காய்களை வாங்கிச்சென்றனர்.

நெல்லையில் சமூக இடைவெளியை மக்கள் முறையாகக் கடைப்பிடித்து வட்டமாக அடையாளமிடப்பட்ட இடத்தில் நின்று காய்கறிகள் வாங்கிச்சென்றனர். மேலும்  உழவர் சந்தைக்குள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், வெளியே உள்ள மைதானத்தில் கடைகள் தனித்தனியாக இடைவெளி விட்டு வைக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சமூக இடைவெளி விட்டு, வட்டத்திற்குள் நிற்க வைத்து ஒவ்வொருவராக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் மருத்துவமணை முன்பும், வளாகத்துக்குள்ளும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

சேலத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி ஆகிய உழவர் சந்தைகளில் இடைவெளிவிட்டு நின்று பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச்சென்றனர். இன்று அதிக கூட்டம் காணப்பட்டதால் மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு கடை முன்பும் வெள்ளை கோடு போட்டு நிற்க வைத்து காய்கறிகளை வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். இதனை மீறியவர்களுக்கு வியாபாரிகள் காய்கறி தர மறுத்து, இடைவெளி விட்டு வரிசையில் வருமாறு தெரிவித்தனர். இங்கு காலை 8 மணி வரை மட்டுமே காய்கறிகள் விற்க அனுமதிக்கப்பட்டது.

இதுபோல ஆவின் பால் விற்பனை நிலையத்திலும் பொதுமக்கள் வெள்ளைக்கோட்டில் நின்று பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments